வடக்கு காசாவில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள் -... ... இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக தொடரும் போர்..!!
x
Daily Thanthi 2023-10-15 08:01:18.0

வடக்கு காசாவில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள் - பாலஸ்தீனர்களுக்கு 3 மணி நேரம் கெடு விதித்த இஸ்ரேல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 9ம் நாளாக போர் நீடித்து வருகிறது. இதனிடையே, காசா மீது இஸ்ரேல் தரைவழி, கடல்வழி, வான்வழி என மும்முனை தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதற்காக வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் பாலஸ்தீன மக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்லும்படி கடந்த 13ம் தேதி முதல் இஸ்ரேல் எச்சரித்து வருகிறது.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து வடக்கு காசாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தெற்கு பகுதிக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் உடனடியாக தெற்கு பகுதிக்கு செல்லும்படி இஸ்ரேல் பாதுகாப்புப்படை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப்படை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், காசா நகரில் உள்ள மக்கள் தெற்குப்பகுதிக்கு செல்லும்படி கடந்த சில நாட்களாக நாங்கள் கோரிக்கைவிடுத்து வருகிறோம். சலப் அட்டின் தெரு வழியில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை (3 மணி நேரம் - தற்போதைய இஸ்ரேல் நேரம் காலை 10.45) இஸ்ரேல் பாதுகாப்புப்படை எந்த நடவடிக்கையும் எடுக்காது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வடக்கு காசாவில் உள்ள மக்கள் தயவு செய்து தெற்கு பகுதிக்கு செல்லும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

உங்கள் பாதுகாப்பும், உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பும் முக்கியம். தயவு செய்து எங்கள் ஆலோசனையை கேட்டு தெற்கு பகுதிக்கு செல்லுங்கள். ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைவர்களும், குடும்பத்தினரும் அவர்களின் பாதுகாப்பை ஏற்கனவே உறுதி செய்துவிட்டனர்’ என்றார்.


Next Story