நாளை தொடங்கும் ஜி-20 மாநாடு: டெல்லி வந்தார் நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே
புதுடெல்லி,
உலகின் அதிகாரம் மிகுந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை தற்போது இந்தியா அலங்கரித்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ரஷியா, சீனா போன்ற வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய இந்த அமைப்பின் உச்சி மாநாடு டெல்லியில் நாளையும் (சனிக்கிழமை), நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
இந்தியா தலைமை தாங்கி நடத்தும் இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இதைப்போல உறுப்பினர் அல்லாத பல்வேறு நாடுகளும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கின்றன.
உலக வல்லரசுகள் உள்பட முக்கியமான நாடுகளின் தலைவர்களை ஒரே நேரத்தில் வரவேற்க தயாராகும் இந்தியா, இதற்காக தலைநகரில் பிரமாண்ட ஏற்பாடுகளை செய்துள்ளது.
பிரமாண்டமான இந்த ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்கும் தலைவர்கள் டெல்லியில் குவியத்தொடங்கி விட்டனர்.
இந்நிலையில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே டெல்லி வந்தடைந்தார்.