நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டரில் இருந்து வெற்றிகரமாக வெளியேறியது பிரக்யான் ரோவர்..!!
பெங்களூரு,
நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறியது. இது 14 நாட்கள் நிலவின் மேற்பரப்பில் ஆய்வு நடத்துகிறது.
வெற்றிகரமாக தரையிறங்கியது
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் 41 நாட்கள் பயணம் செய்து இலக்கை அடைந்து விட்டது.
விண்கலத்தில் இணைக்கப்பட்டிருந்த விக்ரம் லேண்டர் நேற்று மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. மிகவும் சவாலான இந்த பணிகளை பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத்தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மிகுந்த சாதூர்யமாக நடத்தி முடித்தனர்.
இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த அயராத பணிகள் உலக நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளது.
ரோவர் வெளியேறியது
விக்ரம் லேண்டர் தரையிறங்கியபின் இந்த திட்டத்தின் அடுத்த பணியான பிரக்யான் ரோவர் வெளியேற்றத்தை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.
அவர்களின் சீரிய முயற்சியால் லேண்டரின் வயிற்றுப்பகுதியில் இருந்த இந்த ரோவர் சில மணி நேரங்களில் வெளியேறியது. இது விஞ்ஞானிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.
நிலவின் தரைப்பகுதியில் தடம் பதித்த ரோவர், அங்கேயே உருண்டோடி ஆய்வு பணிகளை தொடங்கி இருக்கிறது. தொடர்ந்து 14 நாட்கள் நிலவின் தரைப்பகுதியில் பல்வேறு ஆய்வுகளை ரோவர் மேற்கொள்ளும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
புகைப்படம் அனுப்பியது
முன்னதாக, விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியதும் புகைப்படங்களை எடுத்து அனுப்பத்தொடங்கியது. இதில் லேண்டர் தரையிறங்கி இருக்கும் பகுதிகளும் தெளிவாக தெரிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த புகைப்படத்தில் லேண்டரின் ஒரு கால் பகுதியும், அதன் நிழலும் தெளிவாக தெரிவதாக கூறிய விஞ்ஞானிகள், நிலவின் ஒரு தட்டையான பகுதியில் லேண்டர் தரையிறங்கியிருப்பது புகைப்படம் மூலம் அறிய முடிவதாகவும் தெரிவித்தனர்.