பெங்களூரு,   பூமியின் துணைக்கோளான நிலவில் மனிதன்... ... நிலவில் ஆய்வை தொடங்கி விட்டேன் - ரோவர் தகவல்: அடுத்த 14 நாட்கள்...   ரோவர் செய்யப்போகும் மெகா சம்பவம்
x
Daily Thanthi 2023-08-23 19:00:18.0
t-max-icont-min-icon

பெங்களூரு,

பூமியின் துணைக்கோளான நிலவில் மனிதன் காலடி வைத்திருந்தாலும், அதிலுள்ள மர்மங்களை மனிதன் முழுவதுமாக இன்னும் அறிந்திடவில்லை.

நிலவு ஆய்வில் இந்தியா

அதை முற்றிலும் கண்டறிவதில்தான் ஒட்டுமொத்த உலக வல்லரசுகளும் ஈடுபட்டு இருக்கின்றன. மற்ற நாடுகளும் இந்த கனவை தக்க வைத்திருக்கின்றன.

நிலவில் தண்ணீர் உள்ளதா? பிராண வாயு இருக்கிறதா? உயிர்கள் வசிக்கின்றனவா? வாழ்வதற்கான சாத்தியம் உள்ளதா? என அது சார்ந்த தேடல்கள் தொடர்கின்றன.

சந்திரனை ஆய்வு செய்யும் இந்த போட்டியில் வல்லரசு நாடுகளுடன், ‘நாங்களும் இருக்கிறோம்’ என இந்தியாவும் அடிக்கடி உலகுக்கு அழுத்தமாக பறைசாற்றி வருகிறது.

சந்திரயான் திட்டம்

140 கோடி இந்தியர்களின் சார்பில், இஸ்ரோ எனப்படும் ‘இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்’ இந்த சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

இந்தியாவின் இந்த தேடலுக்கு அச்சாரமிட்டது, சந்திரயான்-1.

கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந்தேதி பி.எஸ்.எல்.வி. சி-11 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட இந்த விண்கலம், முதன்முதலாக நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது.

நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்த இந்த விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை முதன் முதலாக உலகுக்கு அறிவித்தது.

செயலிழந்த லேண்டர்

இதைத்தொடர்ந்து நிலவில் தரையிறங்கி அதுவும் உலகில் எந்த நாடுமே செல்லாத தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்யும் வகையில் சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் அனுப்பப்பட்டது.

ரூ.978 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலத்தில், நிலவை சுற்றி வருவதற்காக ஆர்பிட்டர், தரையிறங்குவதற்கான லேண்டர், ஆய்வு செய்வதற்கான ரோவர் போன்றவை இணைக்கப்பட்டு இருந்தன.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர், தரையிறங்கும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிலவின் தரைப்பகுதியில் மோதி செயலிழந்தது.

ஆனாலும், அதன் ஆர்பிட்டர் நிலவின் சுற்றுப்பாதையில் தற்போதும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. செயல்பாட்டிலும் உள்ளது.

சந்திரயான்-3 விண்கலம்

சந்திரயான்-2 திட்டத்தில் ஏற்பட்ட லேசான சறுக்கலால் துவண்டு விடாத இஸ்ரோ, அதில் இருந்து பெற்றுக்கொண்ட பாடங்களை வைத்துக்கொண்டு மீண்டும் சந்திரனை ஆய்வு செய்ய திட்டத்தை உருவாக்கியது.

இதற்காக உருவாக்கப்பட்ட திட்டமே, சந்திரயான்-3 விண்கலம்.

ரூ.615 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தில் சந்திரயான்-3 விண்கலத்துடன் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக லேண்டர் மற்றும் ரோவரும் இணைக்கப்பட்டு இருந்தன.

இந்த விண்கலம் எல்.வி.எம்.3-எம்.4 ராக்கெட் மூலம் கடந்த மாதம் 14-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது.

5 கட்ட பணிகள்

ஒட்டுமொத்த உலகின் பார்வையை ஈர்த்துக்கொண்டு, 140 கோடி இந்தியர்களின் கனவுகளை சுமந்தவாறு சென்ற இந்த ராக்கெட் 179 கி.மீ. உயரத்தை அடைந்ததும் சந்திரயான்-3 விண்கலத்தை புவியின் சுற்று வட்டப்பாதையில் செலுத்தியது.

அதன்பின்னர் சந்திரயான்-3 விண்கலத்தை நிலவை நோக்கி செலுத்தும் பணிகளை பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டுத்தளத்தில் இருந்து விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

சந்திரயான்-3 விண்கலத்தின் பயணமானது, பூமியில் இருந்து விண்ணை நோக்கி செல்வது, பூமியை சுற்றுவது, பூமியில் இருந்து நிலவை நோக்கிய பயணம், நிலவை சுற்றுவது, நிலவில் தரையிறங்குவது என்று 5 கட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது.

இதன் இறுதி நிலையான நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கும் வரலாற்று நிகழ்வு ஆகஸ்டு 23-ந்தேதி (நேற்று) நடைபெறும் என விஞ்ஞானிகள் அறிவித்து இருந்தனர். அதற்காக இரவு-பகல் பாராமல் சந்திரயானோடு விஞ்ஞானிகளின் ஆய்வு மற்றும் கண்காணிப்பு பயணமும் நீடித்தது.

படிப்படியாக உயர்த்தினர்

அதன்படி, புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் உயரத்தை முதலில் விஞ்ஞானிகள் படிப்படியாக உயர்த்தி கொண்டே வந்தனர். பின்னர் நிலவு சுற்றுவட்டப்பாதையை நோக்கி கடந்த 1-ந்தேதி செலுத்தப்பட்டது.

இவ்வாறு நிலவு சுற்றுவட்டப்பாதையில் சுற்றி வந்த விண்கலத்தின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில், சந்திரயான் விண்கலத்தின் உந்துகலனில் இருந்து ‘லேண்டர்’ கருவி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இது கடந்த 17-ந்தேதி நடந்தது.

இதைத்தொடர்ந்து லேண்டர் கருவி சுற்றுவட்டப்பாதையின் உயரத்தை விஞ்ஞானிகள் படிப்படியாக குறைத்துக்கொண்டே வந்தனர். சவால் நிறைந்த இந்த பணிகளை பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து விண்கலத்துக்கு சிக்னல்களை அளித்தவாறே விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

 

நம்பிக்கையுடன் தரையிறக்கினர்

இறுதியாக நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்கும் அந்த நாளும் (நேற்று) வந்தது. இதற்காக 140 கோடி இந்தியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகின் கவனமும் சந்திரயான்-3 விண்கலத்தை நோக்கியே இருந்தன.

இந்த கனவுக்கு உயிர்கொடுக்கும் பணிகளை இஸ்ரோ விஞ்ஞானிகள் நேற்று மாலை 5.44 மணிக்கு தொடங்கினர்.

ரோவருடன் மொத்தம் 1,749.84 கிலோ எடை கொண்ட லேண்டரை தரையிறக்குவதில் பெரும் சவால்கள் இருந்தபோதும், இந்த பணிகளில் மிகுந்த நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் அவர்கள் ஈடுபட்டனர்.

நிலவின் மேற்பரப்பில் இருந்து 25 கி.மீ. உயரத்தில் லேண்டர் சுற்றிக்கொண்டு இருந்தபோது தானியங்கி தரையிறங்கும் செயல்பாட்டை விஞ்ஞானிகள் தொடங்கினர். அதன்படி லேண்டரின் தரையிறங்கும் வேகம் வினாடிக்கு 1.6 கி.மீ. ஆக குறைக்கப்பட்டது.

வரலாறு படைப்பு

அதைத்தொடர்ந்து நிலவின் ஈர்ப்பு சக்திக்கு ஏற்ப லேண்டரின் வேகத்தை குறைத்துக்கொண்டே வந்த விஞ்ஞானிகள் நிலவின் மேற்பரப்புக்கு இணையான (கிடைமட்ட) நிலையிலேயே அதை இயக்கினர்.

பின்னர் அதை தரையிறக்குவதற்கான பகுதியை அடைந்ததும் லேண்டரை செங்குத்தாக தரையிறக்குவதற்கான சிக்னல்களை விஞ்ஞானிகள் வழங்கினர்.

அதன்படி மாலை 6.04 மணியளவில் நிலவின் மேற்பரப்பில் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.

நிலவு ஆய்வில் இந்தியா வரலாறு படைத்த தருணமாக அது மாறியது.

 

விஞ்ஞானிகள் ஆனந்த கண்ணீர்

அத்துடன் நிலவில் லேண்டரை தரையிறக்கிய நாடுகளில் அமெரிக்கா, சோவியத் ரஷியா மற்றும் சீனாவுக்கு அடுத்ததாக 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றது.

அதேநேரம் நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையும் இந்தியா வசமானது.

எந்தவித சிரமமும் இன்றி நிலவில் லேண்டர் தரையிறங்கிய அந்த கணம் பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு நிலையம் விஞ்ஞானிகள் மற்றும் பார்வையாளர்களின் கரவொலியால் அதிர்ந்தது. அது அடங்க சில நிமிடங்கள் ஆனது.

ஒருவருக்கொருவர் ஆரத்தழுவல், ஆனந்த கண்ணீர் என எங்கு நோக்கினும் ஆனந்தக் கொண்டாட்டங்கள்.

நிலவில் தரையிறங்கிய லேண்டருடன் பெங்களூரு தரை கட்டுப்பாட்டுத்தளத்துடன் தொடர்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இது விஞ்ஞானிகளுக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.

 

பிரதமர் மோடி பாராட்டு

இஸ்ரோ விஞ்ஞானிகளின் இந்த மகிழ்ச்சியில் பிரதமர் மோடியும் இணைந்தார்.

தென்ஆப்பிரிக்காவில் இருந்தவாறே காணொலி காட்சி மூலம் லேண்டர் தரையிறக்கத்தை கண்டுகளித்த பிரதமர் மோடி, நிகழ்வு வெற்றிகரமாக முடிந்ததை பார்த்து கைதட்டியும், தேசியக்கொடியை அசைத்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அத்துடன் விஞ்ஞானிகளை பாராட்டியும், நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் அவர் உரையாற்றினார்.

 

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

42 நாட்களாக 3.84 லட்சம் கி.மீ. தொலைவை வெற்றிகரமாக கடந்துள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மற்றும் ரோவர் கருவிகள் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பை முத்தமிட்டது நாடு முழுவதும் மகிழ்ச்சி வெள்ளத்தை கரைபுரண்டோடச் செய்துள்ளது.

மக்கள் பட்டாசுகளை வெடித்தும், ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

நிலவு ஆய்வில் சரித்திர சாதனை படைத்ததற்கு அரசியல் கட்சியினர், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story