இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து 212 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம்
போர்க்களமாக மாறியிருக்கும் இஸ்ரேலில் இந்தியர்களும் சுமார் 20 ஆயிரம் பேர் உள்ளனர். போரின் உக்கிரத்தால் அவர்களில் பலரும் நாடு திரும்ப துடித்து வருகின்றனர். எனவே இவர்களை மீட்க மத்திய அரசு களத்தில் இறங்கி இருக்கிறது.
ஏற்கனவே ரஷியா தாக்குதலில் சிக்கிய உக்ரைனில் இருந்தும், உள்நாட்டுப்போரில் சிக்கிய தெற்கு சூடானில் இருந்தும் இந்தியர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்டு இருந்தது.
இந்த அனுபவங்களின் அடிப்படையில் இஸ்ரேலில் இருந்தும் இந்தியர்களை மீட்கும் பணிகளை தொடங்கி இருக்கிறது. இதற்காக ‘ஆபரேசன் அஜய்’ என்ற பெயரில் அதிரடி மீட்பு நடவடிக்கையை அறிவித்து உள்ளது.
இந்த சூழலில் ஆபரேஷன் அஜய்யின் கீழ் வாடகைக்கு எடுக்கப்பட்ட ஏஐ 1140 என்ற விமானம் நேற்று இஸ்ரேலுக்கு புறப்பட்டுச் சென்றது.
இந்நிலையில் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்திலிருந்து 212 இந்தியர்களுடன் விமானம் நேற்றிரவு இந்தியாவுக்கு புறப்பட்டது.
212 பேருடன் ஏர் இந்தியா விமானம் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறுகையில், "இந்திய குடிமக்களை அழைத்து வருவதற்காக முதல் விமானம் இரவு டெல் அவிவ் சென்றடையும், மேலும் நாளை (இன்று) காலை இந்தியா திரும்ப வாய்ப்புள்ளது” என்று கூறினார்.