காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்... ... காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார் : நாளை இறுதிச்சடங்கு
x
Daily Thanthi 2024-12-14 06:02:58.0
t-max-icont-min-icon

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு 




காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த நவ., 13-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சையளித்து வந்தனர்.

இந்த சூழலில், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உடல்நிலையில் இன்று மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. சென்னை மியாட் மருத்துவமனையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (75) இன்று (14.12.2024) காலை 10:12 மணியளவில் காலமானார். இதற்கான தகவலை காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளநிலையில், அவரது மறைவுக்கு கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த சூழலில் மணப்பாக்கத்தில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இல்லத்தில் அவரது உடலுக்கு உறவினர்கள் மற்றும் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். தொடர்ந்து காங்கிரஸ் தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் உடல் நாளை தொண்டர்களின் அஞ்சலிக்கு வைக்கப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவு தொடர்பாக, மியாட் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்கள் 13 நவம்பர் 2024 அன்று அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர் 2024) காலமானார்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக இருந்து வந்தார்.

தந்தை பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் பேரன்தான், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். சென்னை மாநில கல்லூரியில் படித்த காலத்தில் மாணவரணி காங்கிரஸ் செயலாளராக இருந்தார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வகித்த பதவிகள்

* 1984ம் ஆண்டும் சத்தியமங்கலம் தொகுதியில் வெற்றிபெற்று முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார்.

* 2004-ம் ஆண்டு கோபிசெட்டிபாளையம் மக்களவைத் தொகுதியில் வென்று எம்.பி. ஆனார். 2004-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய ஜவுளித்துறை இணை மந்திரியாக இருந்தார்.

* 2023-ம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வென்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார்.

* முன்னதாக 2000ம் ஆண்டு முதல் 2002-ம் ஆண்டு வரை தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்தார். பின்னர் கடந்த 2014ம் ஆண்டு முதல் 2016 வரை தமிழக காங்கிரஸ் தலைவராக மீண்டும் பொறுப்பு வகித்தார்.


Next Story