தமிழ்நாட்டு மக்கள் மீது அபரிமிதமான அன்பு வைத்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி - கவர்னர் ஆர்.என்.ரவி
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
புனித பூமியான திருச்சிராப்பள்ளிக்கு வருகை தரும் நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியை நெஞ்சார வரவேற்கிறோம். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். விமானம், ரெயில், சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, துறைமுகம் போன்ற பல முடிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைப்பார்.
தமிழ்நாட்டில் 19 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டிடத்தையும், கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி ஆலையையும் (டிஎப்ஆர்பி) அவர் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாட்டு மக்கள் மீதான அபரிமிதமான அன்பு மற்றும் பாசத்துக்காகவும், மாநிலத்தின் நலன் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காகவும் பிரதமர் மோடிக்கு நன்றி’ என தெரிவித்துள்ளார்.