காசாவில் இருந்து வெளிநாட்டவர்கள் வெளியேற ஒப்பந்தம்
பெண்கள், குழந்தைகள் உள்பட 70 பேர் பலியானதாக காசா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளிக்கவில்லை. அதே சமயம் “காசாவில் உள்ள பாலஸ்தீன பொதுமக்கள் எங்கள் எதிரிகள் அல்ல. நாங்கள் அவர்களை அப்படி மதிப்பிடவில்லை, நாங்கள் அவர்களை குறிவைக்கவில்லை. நாங்கள் சரியானதைச் செய்ய முயற்சிக்கிறோம்” என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் ஜொனாதன் கான்ரிகஸ் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் பாதுகாப்பாக எகிப்து வழியாக வெளியேறுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா, இஸ்ரேல், எகிப்து இடையே ஏற்பட்டுள்ளதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறும் நேரத்தில் தாக்குதலை தவிர்க்க இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தை பாலஸ்தீன ஆயுதக் குழுக்களும், ஹமாஸ் உள்ளிட்ட அமைப்புகளும் அங்கீகரித்திருப்பதாக இதற்கான முயற்சியை மேற்கொண்ட கத்தார் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் இருந்து ரபா முனை வழியாக வெளிநாட்டவர்கள் எகிப்துக்குள் செல்வதற்கு எகிப்தும் ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.