யார் இந்த அதிஷி...


யார் இந்த அதிஷி...
x
Daily Thanthi 2024-09-17 07:24:42.0
t-max-icont-min-icon

மதுபான கொள்கை வழக்கில் சிறையில் இருந்த கெஜ்ரிவாலுக்குச் சமீபத்தில் ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறார். அடுத்த டெல்லி முதல்-மந்திரி யார் என்பதில் சஸ்பென்ஸ் இருந்த நிலையில், டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பின் டெல்லியின் புதிய புதல்-மந்திரியாக அதிஷி பதவி ஏற்க உள்ளார். அவரது பின்னணி குறித்து முழுமையாகப் பார்க்கலாம்.

கடந்த 1981ம் ஆண்டு ஜூன் 8ம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான விஜய் சிங் மற்றும் திரிப்தா வாஹி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் அதிஷி. பஞ்சாபி மற்றும் ராஜ்புத் குடும்பத்தில் பிறந்த இவருக்கு, அவரது பெற்றோர் அதிஷி மர்லினா சிங் என்று பெயர் வைத்தனர். மார்க்ஸ் மற்றும் லெனினின் பெயர்களை இணைத்தே அவரது பெற்றோர் மர்லினா என்று வைத்துள்ளனர். இருப்பினும், சில காரணங்களால் அவர் 2018 முதல் மர்லினா பெயரைப் பயன்படுத்துவதில்லை. அதிஷி என்பதை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.

அதிஷி டெல்லியில் பிறந்து வளர்ந்தார். டெல்லியில் உள்ள ஸ்பிரிங்டேல்ஸ் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்த அவர், கடந்த 2001-ம் ஆண்டில், டெல்லியில் உள்ள செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். அங்கு அவருக்கு ஸ்காலர்ஷிப்பும் கிடைத்துள்ளது. 2003-ல் வரலாற்றில் அவர் முதுகலைப் படிப்பை முடித்தார். பிறகு அவர் ரோட்ஸ் அறிஞராக, 2005-ல் ஆக்ஸ்போர்டில் உள்ள மாக்டலன் கல்லூரியில் சேர்ந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்த அதிஷி, கட்சியின் கொள்கைகளை வகுப்பதில் மிக முக்கிய பங்காற்றினார். குறிப்பாக டெல்லியில் கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் அவர் மிக முக்கிய பங்கு வகித்தார். 2015-ம் ஆண்டு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசின்​​ துணை முதல்-மந்திரியும் கல்வி மந்திரியான மணிஷ் சிசோடியாவின் ஆலோசகராக அதிஷி நியமிக்கப்பட்டார்.

டெல்லியின் கல்வித் துறையில் மிகப் பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டு வந்ததில் அதிஷி மிக முக்கிய பங்கு ஆற்றி உள்ளார். டெல்லி அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், கல்வி உரிமைச் சட்டத்தின்படி பள்ளி மேலாண்மைக் குழுக்களை அமைத்தல், தனியார்ப் பள்ளிகளின் கட்டணங்களை முறைப்படுத்துவது எனப் பல முக்கிய திட்டங்களைக் கொண்டு வந்த பெருமை அதிஷியை சேரும்.

தற்போது நிதி மந்திரியாக உள்ள அதிஷி நிதி, திட்டமிடல், பொதுப்பணித்துறை, நீர், மின்சாரம், கல்வி, உயர்கல்வி, சேவைகள், மக்கள் தொடர்பு மற்றும் விழிப்புணர்வு உள்ளிட்ட முக்கிய துறைகளைக் கவனித்து வருகிறார். சுமார் 11 இலாகாக்கள் அவருக்குக் கீழ் வருகிறது. டெல்லியில் வேறு எந்தவொரு மந்திரியிடமும் இத்தனை இலாகாக்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் அவர் கடந்தாண்டுதான் மந்திரியாக பதவியேற்றார். கடந்தாண்டு நடந்த அமைச்சரவை மாற்றத்தில் அதிஷிக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டது. அவரது செயல்பாடு மிக சிறப்பாக இருந்ததாலேயே பல துறைகள் அவருக்கு வழங்கப்பட்டது. கெஜ்ரிவால் சிறையில் இருந்த நிலையில், சுதந்திர தின நிகழ்ச்சியின் போது அவருக்குப் பதிலாக அதிஷிதான் தேசியக் கொடியையும் ஏற்றியது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ல் நடந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் அதிஷி போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அதிஷி 55,897 வாக்குகளைப் பெற்றார். இதன் மூலம் அவர் சுமார் 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் தரம்பிரை வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.


Next Story