மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன்..? ஐகோர்ட்டு கேள்வி
பா.ம.க. போராட்டத்துக்கு அனுமதிக்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் பா.ம.க. வழக்கறிஞர் பாலு மனு அளித்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதி பி.வேல்முருகன், “பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியலாக்குவது ஏன் ?” என கேள்வி எழுப்பிய அவர் போராட்டம் நடத்தும் ஒவ்வொருவரும் தங்கள் மனதில் கை வைத்து பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என்று கூறுங்கள். இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தை அனைவரும் அரசியலாக்கி வருகிறார்கள். இந்த விவகாரத்தை கோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரம் போராட்டம் நடத்துவது ஏற்புடையது அல்ல; வெறும் விளம்பரத்திற்காக இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளீர்கள்” என அவர் கூறினார்.
இதனைத்தொடர்ந்து அரசியல் விளம்பரத்துக்காக செய்யப்படும் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.