ஆட்சி அமைக்க உரிமைகோரினார் அதிஷி
டெல்லியின் அடுத்த முதல்-மந்திரி யார் என்பது குறித்து அரவிந்த் கெஜ்ரிவாலின் வீட்டில் இன்று ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் கலந்துகொண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லியில் நீர்வளத்துறை உள்பட 14 துறைகளை கவனித்து வரும் அதிஷியை டெல்லியின் புதிய முதல்-மந்திரியாக்க அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்திருக்கிறார்.
அதன் பேரில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் அதிஷி டெல்லி புதிய முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், ஆம் ஆத்மி சட்டமன்றக் குழுத் தலைவராகவும் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த சூழலில் டெல்லி முதல்-மந்திரி பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து ஆம் ஆத்மி சட்டசபை தலைவராக தேர்வான அதிஷி டெல்லியில் புதிய அரசு அமைக்க உரிமை கோரினார். கெஜ்ரிவாலுடன் துணை நிலை கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அதிஷி உரிமை கோரியுள்ளார்.
இதன்படி டெல்லி ஆம் ஆத்மி அரசின் புதிய முதல்-மந்திரியாக அதிஷி மர்லெனா (43) பதவியேற்க உள்ளார்.