சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் உயர்வு; ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்கு சந்தை


சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகள் உயர்வு; ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்கு சந்தை
x
தினத்தந்தி 26 July 2024 10:26 AM GMT (Updated: 2 Aug 2024 6:13 AM GMT)

இந்திய பங்கு சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

மும்பை,

2024-25ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் கடந்த செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் இந்திய பங்கு சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனை தொடர்ந்து புதன்கிழமையும் பங்கு சந்தை சரிவுடன் வர்த்தகமாகனது. ஆனால், நேற்று வர்த்தகம் தொடங்கியதும் சரிவில் இருந்த பங்கு சந்தை மெல்ல மீளத்தொடங்கியது. ஆனாலும், நேற்று வர்த்தக நேர முடிவில் பங்கு சந்தை வீழ்ச்சியிலேயே நிறைவடைந்தது.

இந்நிலையில், வர்த்தக இறுதி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) இந்திய பங்கு சந்தை பெரும் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.

நிப்டி காலை 9.15 மணிக்கு வர்த்தகம் தொடங்கியபோது 24 ஆயிரத்து 423 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை தொடங்கியது. பின்னர், 24 ஆயிரத்து 410 புள்ளிகள் வரை இறக்கம் பெற்று பின்னர் மெல்ல ஏறத்தொடங்கியது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கி குவித்ததால் நிப்டி பெரும் ஏற்றம் கண்டது. வர்த்தகத்தின்போது நிப்டி 24 ஆயிரத்து 861 புள்ளிகள் என்ற புதிய உச்சத்தை நிப்டி எட்டியது. பின்னர், வர்த்தக இறுதியில் நிப்டி 24 ஆயிரத்து 834 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதேவேளை, பேங்க் நிப்டி 50 ஆயிரத்து 456 என்ற புள்ளியில் வர்த்தகத்தை தொடக்கியது. பின்னர், சற்று இறக்கம்பெற்று பின்னர் ஏற்றம்காணத்தொடங்கியது. சுமார் 800 புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்பெற்ற பேங்க் நிப்டி 51 ஆயிரத்து 398 புள்ளிகள் வரை வர்த்தகமானது. பின்னர் வர்த்தக இறுதியில் 51 ஆயிரத்து 295 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதேபோல், சென்செக்ஸ் ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்பெற்றது. 80 ஆயிரத்து 158 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை தொடக்கிய சென்செக்ஸ் 80 ஆயிரத்து 13 என்ற புள்ளிகள் வரை இறக்கம் கண்டது. பின்னர், காலை முதலே சென்செக்ஸ் ஏற்றம்பெற தொடங்கியது. 1 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் ஏற்றம்பெற்ற சென்செக்ஸ் வர்த்தகத்தின்போது 81 ஆயிரத்து 427 என்ற புள்ளிகள் வரை சென்றது. பின்னர், வர்த்தக இறுதியில் 81 ஆயிரத்து 332 என்ற புள்ளிகளில் சென்செக்ஸ் நிறைவடைந்தது.

அதேபோல், சுமார் 400 புள்ளிகள்வரை ஏற்றம்பெற்ற பின்நிப்டி 23 ஆயிரத்து 316 என்ற புள்ளிகளில் நிறைவடைந்தது. மேலும், சுமார் 250 புள்ளிகள்வரை ஏற்றம்பெற்ற மிட்கேப் நிப்டி 12 ஆயிரத்து 697 புள்ளிகள் என்ற புதிய உச்சம் வரை சென்றது. பின்னர், 12 ஆயிரத்து 687 என்ற புள்ளிகளில் மிட்கேப் நிப்டி நிறைவடைந்தது.

மேலும், பேங்க் எக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் வரை ஏற்றம்பெற்றுள்ளது, 57 ஆயிரத்து 888 என்ற புள்ளிகளில் வர்த்தகத்தை தொடக்கிய பேங்க் எக்ஸ் 57 ஆயிரத்து 699 புள்ளிகள் வரை இறக்கம் கண்டுள்ளது. பின்னர், ஏற்றம்காண தொடங்கிய பேங்க் எக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் வரை ஏற்றம்பெற்று 58 ஆயிரத்து 717 என்ற புள்ளிவரை சென்றது. பின்னர், வர்த்தக இறுதியில் பேங்க் எக்ஸ் 58 ஆயிரத்து 638 என்ற புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக இறக்கம் கண்டுவந்த இந்திய பங்கு சந்தை இன்று ஒரேநாளில் பெரும் ஏற்றம் கண்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Next Story