மிரட்டும் ஹிண்டன்பர்க்... சரிவை சந்திக்குமா இந்திய பங்கு சந்தை? - ஒரு அலசல்


மிரட்டும் ஹிண்டன்பர்க்... சரிவை சந்திக்குமா இந்திய பங்கு சந்தை? - ஒரு அலசல்
x
தினத்தந்தி 10 Aug 2024 5:11 PM IST (Updated: 10 Aug 2024 5:37 PM IST)
t-max-icont-min-icon

'இந்தியா விரைவில் பெரிய சம்பவம் வருகிறது ' என்று ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.

டெல்லி,

அமெரிக்காவை சேர்ந்த ஷாட் செல்லிங் (Short Selling) நிறுவனம் ஹிண்டன்பர்க். உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த முன்னணி நிறுவனங்களை குறிவைத்து ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. முன்னணி நிறுவனங்கள் நிதி முறைகேடுகள் செய்வதாக கூறி ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கையாக வெளியிடுகின்றன.

ஷாட் செல்லிங் (Short Selling);

ஷாட் செல்லிங் என்பது பங்கு சந்தையில் அதிக விலையில் உள்ள ஒரு நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்திக்கும் என (Put Option - PE) முன்கூட்டியே கணித்து அது தொடர்பாக வர்த்தகம் செய்வதாகும். பங்குகள் சரிவை சந்தித்தபின்னர் குறைவான விலையில் உள்ள அந்த பங்குகள் மீண்டும் உயரும் என (Call Option - CE) கணித்து அது தொடர்பான வர்த்தகம் செய்வதாகும்.

அதானி குழுமத்தை குறிவைத்த ஹிண்டன்பர்க்:

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஹிண்டன்பர்க் நிறுவனம் இந்தியாவின் அதானி குழுமத்தை குறி வைத்தது. அதானி குழுமம் பங்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி அறிக்கை வெளியிட்டது. அதானி குழுமம் தனது பங்குகளின் மதிப்பை உயர்த்திக்காட்டி அதன் மூலம் அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.

அதானி குழும பங்குகள் சரிவு:

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. அதானி எண்டர்பிரைஸ் பங்கு 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 1000 ரூபாய்க்கு சரிந்தது. அதானி போர்ட், அதானி கிரீன் எனர்ஜி, அதானி பவர், அதானி வில்மர் என அதானி குழுமத்தின் அனைத்து பங்குகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

10 லட்சம் கோடி இழப்பு:

ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பின்னர் அதானி குழுமம் சந்தை மதிப்பு 10 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்தது.

கடும் சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தை:

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து இந்திய பங்கு சந்தை கடும் சரிவை சந்தித்தது. நிப்டி, சென்செக்ஸ், பேங்க் நிப்டி என அனைத்து பங்கு சந்தை குறியீடுகளும் சரிவை சந்தித்தன.

குற்றச்சாட்டுகளை நிராகரித்த அதானி குழுமம்:

அதேவேளை, ஹிண்டன்பர்க் தெரிவித்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் நிராகரித்தது.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு:

இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் எந்த முறைகேடுகளும் செய்யவில்லை என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் பொய்யான ஆய்வுகளை வெளியிட்டதாக அதானி குழுமம் முறையிட்டது.

அதானிக்கு ஆதரவான தீர்ப்பு:

பங்கு சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அதானி குழுமத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் அதானி குழுமம் முறைகேட்டில் ஈடுபடவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

செபி விசாரணை:

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதில், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்திய பங்கு சந்தையில் சரிவை ஏற்படுத்த ஹிண்டன்பர்க் நிறுவனம் முயற்சிப்பதாக செபி குற்றஞ்சாட்டியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஹிண்டன்பர்க் நிறுவனத்திற்கு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மீண்டெழும் அதானி குழுமம்:

ஹிண்டன்பர்க் அறிக்கையை தொடர்ந்து பெரும் சரிவை சந்தித்த அதானி குழுமம் சரிவில் இருந்து மீண்டு வருகிறது.

4 ஆயிரம் ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய்க்கு சரிந்த அதானி குழுமத்தின் அதானி எண்டர்பிரைஸ் பங்கு விலை தற்போது 3 ஆயிரத்து 400 ரூபாய் வரை சென்றது. தற்போது அந்த பங்கு 3 ஆயிரத்து 187 ரூபாய் என்ற நிலையில் உள்ளது.

சரிவில் இருந்து மீண்ட இந்திய பங்கு சந்தை:

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பின்னர் இந்திய பங்கு சந்தை பெரும் சரிவை சந்தித்த நிலையில் அதன்பின்னர், பெரும் ஏற்றம் பெற்றது. குறிப்பாக, ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான போது சரிவை சந்தித்த நிப்டி குறியீடு 17 ஆயிரம் புள்ளிகளில் இருந்த நிலையில் பின்னர் பெரும் ஏற்றம் கண்டது. தற்போதைய நிலவரப்படி நிப்டி குறியீடு 24 ஆயிரத்து 300 என்ற புள்ளிகளில் உள்ளது.

மிரட்டும் ஹிண்டன்பர்க்:

இந்நிலையில், 'இந்தியா விரைவில் பெரிய சம்பவம் வருகிறது' என்று ஹிண்டன்பர்க் இன்று மிரட்டல் விடுத்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் பெரு நிறுவனம் ஒன்றின்மீது ஹிண்டன்பர்க்கின் பார்வை திரும்பியுள்ளது என்பது உறுதியாகியுள்ளது.

உச்சத்தில் இந்திய பங்கு சந்தை:

இந்தியாவை குறிவைத்து ஹிண்டன்பர்க் மற்றொரு குற்றச்சாட்டை முன்வைக்க உள்ள நிலையில் இந்திய பங்கு சந்தை சமீபத்தில் உச்சம் தொட்டுள்ளது.

சமீபத்தில் 25 ஆயிரத்து 78 என்ற புள்ளிகள் என்ற புதிய உச்சம் தொட்ட நிப்டி வெள்ளிக்கிழமை சந்தை முடிவின்போது 24 ஆயிரத்து 367 என்ற புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

சரிவை சந்திக்கும் இந்திய பங்கு சந்தை?

இந்தியா குறித்து ஹிண்டன்பர்க் அறிக்கை எப்போது வெளியாகும் என தகவல் இல்லாத நிலையில் ஏற்கனவே உச்சத்தில் உள்ள இந்திய பங்கு சந்தை சரிவை சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹிண்டன்பர்க் நம்பகத்தன்மை:

அதானி குழுமம் தொடர்பாக குற்றச்சாட்டுகள் மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் அதானி குழுமத்திற்கு ஆதரவான தீர்ப்பு ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளது.

சரிவும், வாய்ப்பும்;

ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்கு சந்தை சரிவை சந்தித்தாலும் அது முதலீட்டாளர்களுக்கு அதிக வாய்ப்பையே ஏற்படுத்தலாம் என தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த முறை ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானபோது சரிவை சந்தித்த இந்திய பங்கு சந்தை பின்னர் மீண்டெழுந்து புதிய உச்சம் தொட்டது.

ஹிண்டன்பர்க் அறிக்கையால் இந்திய பங்கு சந்தை சரிவை சந்தித்தாலும் அது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

வலிமையான கட்டமைப்புடன் இந்திய பங்கு சந்தை:

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியாகி அதன் மூலம் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டாலும் அது குறுகிய காலமே நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வலிமையான கட்டமைப்புடன் இந்திய பங்கு சந்தை உள்ளதால் எந்தஒரு சரிவும் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story