தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக சரிவு...இன்றைய நிலவரம் என்ன?


Today Gold Rate
x

File image

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை, சரிவை சந்தித்து வருகிறது.

சென்னை,

தங்கம் விலை இந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி அறிவித்தார். பட்ஜெட் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.51,320-க்கு விற்று வந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.51,080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.6,385-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.89-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story