ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு
ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது.
புதுடெல்லி,
கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் அந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.
காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு பொது நலவழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது. அதில், ஜம்மு காஷ்மீரில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். மாநில அந்தஸ்தை விரைவாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. லடாக்கை யூனியன் பிரதேசமாக உருவாக்கியது செல்லும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.