கனடா நாட்டவர்களுக்கு மீண்டும் இ-விசா - இந்திய வெளியுறவுத்துறை தகவல்
இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.
புதுடெல்லி,
காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு பாதிக்கப்பட்டது. இதனிடையே நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ஆம் தேதி கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவு அமைப்புக்கு தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார். அதனை தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேறுமாறும் கனடா உத்தரவிட்டது.
இதற்கு பதிலடியாக, இந்தியாவிலுள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை இந்தியா வெளியேற்றியது. மேலும், கனடாவின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, ட்ரூடோவின் குற்றச்சாட்டையும் மறுத்தது.
இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கனடாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கான அனைத்து வகை நுழைவு இசைவு வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. அதோடு, இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.
இந்தநிலையில், கனடாவில் குறிப்பிட்ட விசா சேவையை கடந்த மாத இறுதியில் இந்தியா மீண்டும் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக (22 ஆம் தேதி) இன்று முதல் கனடா நாட்டினருக்கு இ-விசா சேவை தொடங்கப்பட்டுள்ளது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு கனடா நாட்டவர்களுக்கு இ-விசா வழங்கும் பணியை தொடங்கியது இந்திய வெளியுறவுத்துறை. கடந்த மாதம் செப்டம்பரில் கனடாவிற்கு இ-விசா சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.