காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: மந்தனா அதிரடி... பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா


காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: மந்தனா அதிரடி... பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா
x
தினத்தந்தி 31 July 2022 6:48 PM IST (Updated: 31 July 2022 7:04 PM IST)
t-max-icont-min-icon

இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. தொடக்க விழா நேற்று முன் தினம் முடிவடைந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று பல்வேறு விளையாட்டு போட்டிகள் தொடங்கி நடைபெற்றன.

இந்த நிலையில் இன்று நடைபெறும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதி வருகிறது.

இந்த போட்டியின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டாஸ் போடுவது தாமதமானது. வானம் தெளிவாக பிறகு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

மழையின் காரணமாக போட்டியில் இரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடக்க வீராங்கணையாக களமிறங்கிய முனிபா அலி 32 ரன்கள் எடுத்தார். அவருடன் களமிறங்கிய மற்றொரு தொடக்க வீராங்கணையான இரம் ஜாவத் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டானார்.

அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் 17 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பந்துவீச்சில் தடுமாடிய பாகிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இறுதியில் அந்த அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீராங்கணையான களமிறங்கிய ஷபாலி வர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஸ்மிர்தி மந்தனா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார்.

இறுதியில் இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.


Next Story