நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் சென்றது சந்திரயான் 3 விண்கலம்
நிலவை ஆராய சென்ற சந்திரயான் 3 விண்கலம் நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சென்றுள்ளது.
சென்னை,
நிலவு குறித்த ஆய்வில், அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாதான் முன்னிலையில் இருந்து வருகிறது. 2008-ம் ஆண்டு சந்திரயான்-1, 2019-ம் ஆண்டு சந்திரயான்-2 ஆகிய விண்கலங்களை நிலவு ஆராய்ச்சிக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான 'இஸ்ரோ' அனுப்பியது.
இதுவரை எல்லா நாடுகளும் நிலவின் வடதுருவ பகுதியில்தான் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றன. தென்துருவத்தை ஆராயும் பணியை யாரும் தொடங்காத நேரத்தில், இந்தியா சந்திரயான்-2-ஐ நிலவின் தென்துருவ பகுதிக்கு அனுப்பியது. ஆனால், நிலவில் குறிப்பிட்ட பகுதியில் தரையிறங்கியபோது, லேண்டர் கருவி வேகமாக மோதி உடைந்தது. அதே நேரத்தில், விண்கலத்தின் ஆர்பிட்டர், நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு, தற்போதும் அது செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளின் 4 ஆண்டு கால இடைவிடாத முயற்சியின் பயனாய், மீண்டு எழுந்து மீண்டும் சந்திரயான்-3 என்ற விண்கலத்தை உருவாக்கி, கடந்த மாதம் (ஜூலை) 14-ந்தேதி நிலவின் தென்துருவ பகுதிக்கு அந்த விண்கலம் பயணத்தை தொடங்கி இருக்கிறது.
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-3 புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது பூமியில் இருந்து குறைந்தபட்சம் 170 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 36,500 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதையில் சுற்றத் தொடங்கியது.
இந்த நீள்வட்ட சுற்றுப்பாதையை படிப்படியாக உயர்த்தி விண்கலம் நிலவுக்கு நெருக்கமாகக் கொண்டு செல்லபட்டு வருகிறது. ஏற்கனவே 5 கட்டங்களாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு உயர்த்தப்பட்டது. சந்திரயான் 3 விண்கலம் புவி வட்டத்தின் சுற்றுப்பாதையை கடந்த ஜூலை 30ம் தேதி நிறைவு செய்தது. சந்திராயன்-3 பூமியை சுற்றி தனது சுற்றுப்பாதையை நிறைவு செய்து நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடர ஆரம்பித்துள்ளது.
ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு 12.05 முதல் சந்திரயான் 3 விண்கலம் புவிவட்டப்பாதையில் இருந்து விலக்கப்பட்டு நிலவின் சுற்றுப்பாதைக்குள் தள்ளுவதற்கான உந்து விசை செலுத்தப்பட்டது. இந்த நிலையில், லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) இன்று இரவு சுமார் 7 மணிக்கு நடைபெற்றது. அதன்படி, நிலவின் ஈர்ப்பு விசையில் தற்போது சந்திரயான் 3 விண்கலம் உள்ளது. ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவிற்குள் சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.