தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு மழை தொடரும் - வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு திடீரென இடியுடன் மழை பெய்தது. இந்த நிலையில், அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு மழை தொடரும் என்றும், சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதிலும் கிண்டி, அசோக் நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பொழிந்தது.
இந்த நிலையில் வானிலை மைய தென் மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம் ஜமீன் கொரட்டூரில் 14 செ.மீ. மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பாளையங்கோட்டையில் 39.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.
தமிழகத்தின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியால் அடுத்த 2 அல்லது 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும். சென்னை புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.