பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கைகண்காணிப்பு அலுவலர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கண்காணிப்பு அலுவலர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் தலைமை தாங்கினார். ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், சமத்துவபுர குடியிருப்புகள், தூய்மைபாரத இயக்கம், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள், எண்ணும் எழுத்தும் இலக்கியம், பள்ளிக்கட்டிடங்களின் உள்கட்டமைப்பு வசதிகள், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் மற்றும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து உறுதிசெய் திட்டம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன.
மேலும், தமிழ்நாடு அரசின் திட்டங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் கிராம ஊராட்சிகளில் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கண்காணிப்பு அலுவலர் பிரகாஷ் அறிவுறுத்தினார்.
இதில் போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கூடுதல் கலெக்டர் மனிஷ், மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.