சிம்பிள் ஒன் எனர்ஜி ஸ்கூட்டர்
பெங்களூருவைச் சேர்ந்த சிம்பிள் ஒன் எனர்ஜி என்ற பெயரில் செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது.
இதன் விலை ரூ.1.45 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் வரை. இதில் 5 கிலோவாட் அவர் திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி இரண்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று எளிதில் கழற்றி மாட்டும் வகையிலானது. 4 ஒரே நிறம் (கருப்பு, சிவப்பு, நீலம், வெள்ளை) மற்றும் 2 இரட்டை வண்ணங்கள் (கருப்பு – வெள்ளை, மற்றும் சிவப்பு) என மொத்தம் 6 கண்கவர் வண்ணங்களில் வந்துள்ளது. இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்துள்ள பேட்டரி ஸ்கூட்டரில் இதுதான் எடை அதிகமானதாகும்.
இது முழுவதும் சார்ஜ் செய்யப்பட்டால் 212 கி.மீ. தூரம் ஓடும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர் ஓட்டத்தில் 8.5 கிலோவாட் திறனையும், 72 நியூட்டன் மீட்டர் டார்க் இழு விசையையும் இது வெளிப்படுத்தக்கூடியது. ஸ்டார்ட் செய்து 2.77 விநாடிகளில் 40 கி.மீ. வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது. இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 105 கி.மீ. ஆகும். வீட்டில் உள்ள சார்ஜர் மூலம் 80 சதவீத பேட்டரி திறன் 6 மணி நேரத்திற்குள் சார்ஜ் ஆகிவிடும். முந்தைய மாடலை விட இதன் இருக்கை உயரம் 796 மி.மீ. ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் இது 775 மி.மீ. உயரம் கொண்டதாக இருந்தது.
முன்புறம் டெலஸ்கோப்பிக் போர்க்கும், பின்புறம் மோனோ ஷாக் அப்சார்பரையும் கொண்டது. இரு சக்கரங்களுக்கும் டிஸ்க் பிரேக் வசதி உள்ளது. முன்புறம் 7 அங்குல டி.எப்.டி. திரை உள்ளது. நான்கு விதமான ஓட்டும் நிலைகள் (எக்கோ, ரைட், டாஷ் மற்றும் சோனிக்), எல்.இ.டி. விளக்குகளைக் கொண்டது. 30 லிட்டர் அளவுக்கு இட வசதி கொண்டது.