டொயோட்டா வெல்பயர் அறிமுகம்


டொயோட்டா வெல்பயர் அறிமுகம்
x

டொயோட்டா நிறுவனம் பிரீமியம் ரக மாடலாக வெல்பயர் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.20 கோடி. இதில் ஹெச்.ஐ. மற்றும் வி.ஐ.பி. என இரண்டு வேரியன்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வி.ஐ.பி. மாடல் விலை சுமார் ரூ.1.30 கோடி. இதற்கான முன்பதிவு களை டொயோட்டா விநியோகஸ்தர்கள் கடந்த ஜூன் மாதத்திலிருந்தே தொடங்கிவிட்டனர். ஆறு அடுக்குகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள முன்புற கிரில்லின் மேல்பகுதியின் நடுவே டொயோட்டோ லோகோ பதிக்கப்பட்டுள்ளது.

முகப்பு விளக்கின் கீழ்பகுதியில் பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்கு (டி.ஆர்.எல்.) இடம்பெற்றுள்ளது. யு வடிவிலான குரோமிய இணைப்பு பம்பரையும், இரண்டு முகப்பு விளக்குகளையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 193 ஹெச்.பி. திறன் கொண்டதாகவும், வலுவான ஹைபிரிட் பவர் மோட்டாரைக் கொண்டதாகவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. 2.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்ட இந்த எஸ்.யு.வி. கார், சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 19.28 கி.மீ. தூரம் ஓடியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மிகக் குறைவான பொத்தான்களைக் கொண்ட மிக எளிமையான வடிவமைப்பில் முன்புற டேஷ்போர்டு உள்ளது. 14 அங்குல தொடு திரை, சவுகரியமான இருக்கை, குளிர்ந்த காற்றை வீசும் ஏ.சி. வென்ட் மற்றும் சூரிய ஒளியைக் குறைக்க உதவும் உள்புற ஷேட்கள் உள்ளன.

பிரீமியம் மாடலில் எக்ஸிகியூடிவ் இருக்கை, இரண்டாவது வரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகள், மடக்கும் வகையிலான டேபிள் உள்ளது. பின்னிருக்கைப் பயணிகள் குளிர் காற்றை கண்ட்ரோல் செய்யவும் மற்றும் இசை அளவை அதிகரிக்க அல்லது குறைக்கவும் செய்யலாம். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்க வசதியாக திரை, வயர்லெஸ் சார்ஜர் வசதி, டிரைவர் இருக்கையை 8 நிலைகளில் அட்ஜெஸ்ட் செய்வது, லேன் மாறுவதை உணர்த்துவது, அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் உணர்த்தி, ஸ்டெபிளிடி கண்ட்ரோல், பார்க் அசிஸ்ட், ஹில் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது.

டொயோட்டா செயலி மூலம் 60-க்கும் மேற்பட்ட மேம்பட்ட சேவைகளை இந்தக் காரில் பெற முடியும். விபத்து எச்சரிக்கையை உணர்த்தும் ஏ.டி.ஏ.எஸ். மற்றும் மோதல் தவிர்ப்பு எச்சரிக்கை உள்ளிட்ட அம்சங்கள் இதில் உள்ளன. பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. காரின் நீளம் 4,995 மி.மீ., 1,850 மி.மீ. அகலம், 1,950 மி.மீ. உயரம் கொண்டது. 3 ஆயிரம் மி.மீ. அளவிலான சக்கரங்களைக் கொண்டது. உயரமானவர்கள் வசதியாக பயணிக்க ஏதுவாக இதன் உயரம் 60 மி.மீ. அதிகரிக்கப்பட்டுள்ளது.


Next Story