ஹூண்டாய் கிரெடா, அல்கஸார் அட்வெஞ்சர் எடிஷன் அறிமுகம்
ஹூண்டாய் நிறுவனத் தயாரிப்பில் கிரெடா மற்றும் அல்கஸார் மாடல் எஸ்.யு.வி.க்கள் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடல்களாகும். இவ்விரு மாடல்களிலும் சாகசப் பயணத்திற்கேற்ற வகையிலான மாற்றங்களுடன் அட்வெஞ்சர் எடிஷனை ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. கிரெடா அட்வெஞ்சர் மாடலின் விலை சுமார் ரூ.15.17 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. அல்கஸார் அட்வெஞ்சர் மாடலின் விலை சுமார் ரூ.19.04 லட்சம் முதல் ஆரம்பமாகிறது.
சாகசப் பயண கார்களுக்கே உரிய காக்கி வண்ணம் கொண்டவையாக இவை உருவாக்கப்பட்டுள்ளன. இரட்டை வண்ணங்களைக் கொண்ட இதன் மேற்கூரைப் பகுதி, முன்புறம் மற்றும் பின்புற பம்பர்கள் மற்றும் உள்புறம் முழுவதும் கருப்பு வண்ணத்திலானவை. இரண்டு மாடலுமே 1.5 லிட்டர் திறனுடைய 4 சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினைக் கொண்டது. இது 114 ஹெச்.பி. திறனையும், 144 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். அல்கஸார் மாடலில் டர்போ பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் வந்துள்ளன.
இதில் டி.ஜி.டி.ஐ. என்ஜின் உள்ளது. இது 160 ஹெச்.பி. திறனையும், 253 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும். இரண்டு மாடல்களில் மேனுவல் மாடல்கள் 6 கியர்களையும், ஆட்டோமேடிக் மாடல்கள் 7 கியர்களையும் கொண்டவை. அபிஸ் கருப்பு, அட்லஸ் வெள்ளை, டைட்டன் கிரே, ரேஞ்சர் காக்கி வண்ணங்களில் வந்துள்ளது.