புதிய பாய்ச்சலுக்குத் தயாராகும் ஹீரோ கிளாமர்
இந்தியாவில் இரு சக்கர வாகனங்களை அதிகம் தயாரிக்கும் நிறுவனம் ஹீரோ மோட்டோ கார்ப். இந்நிறுவனத் தயாரிப்புகள் அனைத்துமே எரிபொருள் சிக்கனமானவை. இதன் காரணமாகவே இத்தயாரிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று விளங்குகின்றன. அனைத்துக்கும் மேலாக இவற்றின் பராமரிப்பு செலவு குறைவாக இருப்பதும் இந்நிறுவனத் தயாரிப்புகளின் விற்பனை அதிகமாக இருப்பதற்கு முக்கியக் காரணமாகும். இப்போது பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களோடு கிளாமர் மோட்டார் சைக்கிள் புதிதாக அவதாரமெடுத்துள்ளது. 125 சி.சி. பிரிவில் தலை முறைகளைக் கடந்து அனைத்து தரப்பினரும் விரும்பும் மோட்டார் சைக்கிளாக இது வந்துள்ளது. உயர் செயல்திறன், எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றுடன் நிறுவனத்தின் ஐ 3 எஸ் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சிக்னலில் நிற்பது, என்ஜினை நிறுத்துவது மற்றும் ஸ்டார்ட் செய்வது எளிதாக இருக்கும்.
முழுவதும் டிஜிட்டல் மயமான கன்சோல் அமைப்பு, வாகனத்தின் எரிபொருள் சிக்கனத்தை அளவிடும் வசதி, மொபைல் சார்ஜிங் செய்வதற்குரிய வசதிகள் இதில் கூடுதலாக இடம் பெற்றுள்ளன. டிரம் பிரேக் மாடலும், டிஸ்க் பிரேக் மாடலும் இதில் வந்துள்ளன.
டிரம் பிரேக் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.82,348.
டிஸ்க் பிரேக் மாடலின் விலை சுமார் ரூ.86,348.