கன்னி - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்


கன்னி - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை

நல்லதையே சிந்தித்துக் கொண்டிருக்கும் கன்னி ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் வக்ர இயக்கத்தில் இருக்கிறார். அவரோடு சுக்ரன் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். குருவின் பார்வை உங்கள் ராசிநாதன் மீது பதிகிறது. இந்த அமைப்பு விரய ஸ்தானத்தில் இருப்பதால், அதிக விரயங்களைச் சந்திக்கும் மாதமாக இது இருக்கும். ஆயினும் குரு பார்வையின் காரணமாக அவை அனைத்தும் சுப விரயங்களாகவே அமையும்.

கடக - சுக்ரன்

ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது பொருளாதாரத்தில் உச்ச நிலையை அடைவீர்கள். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய இயலும். தொழில் வெற்றி நடைபோடும். எதிரிகளின் தொல்லை குறையும். வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வரலாம். வாகன யோகம் உண்டு. பணிபுரியும் இடத்தில் உங்கள் கருத்துக்களை மேலதிகாரிகள் ஏற்றுக் கொண்டு செயல்படுவர்.

கன்னி - செவ்வாய்

ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. 'கன்னி செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. எனவே இக்காலத்தில் விரயங்கள் ஏராளமாக வந்துசேரும். மனக்கலக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சி குறையும். பணியாளர்கள் உங்களை விட்டு விலகலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு உதவி செய்வதாகச் சொல்லி, கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டிய நேரம் இது.

மகர - சனி

சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மரக ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். இக்காலத்தில் பஞ்சம ஸ்தானம் வலுப்பெறுவதால் பிள்ளைகளால் பிரச்சினைகள் தலைதூக்கும். பெற்றோர் வழி ஆதரவு குறையும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்வதில் தடைகளும், தாமதங்களும் ஏற்படும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி, வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உத்தியோகத்தில் திடீர் மாற்றங்களும், மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகும் சூழலும் உருவாகும். புதிய ஒப்பந்தங்களை யோசித்து ஏற்றுக் கொள்ளுங்கள். யாரையும் நம்பி எதையும் செய்ய இயலாது. திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டால் நல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும்.

புதன் வக்ர நிவர்த்தி

சிம்மத்தில் சஞ்சரிக்கும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், 10-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் வந்துசேரும். புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்பட்ட மனக்கசப்பு மாறும். சேமிப்பு உயரும். செயல்பாடுகளில் தொடர்ந்து வெற்றி பெறும் சூழல் உருவாகும். உத்தியோக உயர்வு உண்டு. பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு நினைத்தது நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு திருப்தி தரும். கலைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு கைநழுவிச் சென்றாலும், மற்றொரு வாய்ப்பு வந்துசேரும். மாணவர்களுக்கு ஆசிரியர்களின் ஆதரவும், பெற்றோரின் ஒத்துழைப்பும் கூடுதலாக கிடைக்கும். குடும்ப ஒற்றுமைக்கு குந்தகம் விளைவித்தவர்கள் விலகுவர். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-ஆகஸ்டு: 21, 22, 26, 27, செப்டம்பர்: 6, 7, 11, 12.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.


Next Story