கன்னி - ஆனி தமிழ் மாத ஜோதிடம்
ஆனி மாத ராசி பலன்கள் 16-06-2023 முதல் 16-07-2023 வரை
மற்றவர்களின் மனதைப் புரிந்து செயல்படும் கன்னி ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் உச்சம்பெற்ற சந்திரனோடு இணைந்து பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். ஒளிமயமான எதிர்காலத்திற்கு உறுதுணைபுரியும் விதத்தில் நல்ல வாய்ப்புகள் வரப்போகிறது. ஊர்மாற்றம், இடமாற்றம், உத்தியோக மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களுக்கு அது கைகூடும். குருவின் பார்வை தன ஸ்தானத்தில் பதிவதால் பணவரவு சரளமாக இருக்கும்.
மிதுன - புதன்
ஆனி மாதம் 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். இது அவருக்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிநாதன் புதன் என்பதால் இக்காலம் ஒரு இனிய காலமாக அமையும். எதிர்காலத்தை சிறப்பாக்கும் முக்கியப் புள்ளிகளை இப்பொழுது சந்திக்க நேரிடும். அஷ்டமத்து குருவால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் திருப்தி தரும். உத்தியோகத்தில் உங்கள் செயல்பாடுகளையும், திறமைகளையும் பார்த்து மேலதிகாரிகள் பாராட்டுவர். சூரியனோடு புதன் இணைவதால் 'புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. எனவே அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம் கிடைக்கும்.
சிம்ம - செவ்வாய்
ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு செவ்வாய் வருவது யோகம்தான். 8-க்கு அதிபதி 12-ல் வரும்பொழுது எண்ணற்ற நற்பலன்கள் கிடைக்கும். திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கலாம். திடீர் முன்னேற்றம் உண்டு. ஒரு சிலருக்கு வீடு, இடம் வாங்கும் அமைப்பு ஏற்படும். சிம்மத்தில் இருக்கும் செவ்வாயை குரு பார்ப்பதால் கெடுபலன்கள் குறையும்.
சிம்ம - சுக்ரன்
ஆனி 18-ந் தேதி, சிம்ம ராசிக்கு சுக்ரன் வருகிறார். அவர் அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். மேலும் குருவின் பார்வை பதிந்த செவ்வாயின் பார்வை, சனி மீது விழுகின்றது. எனவே தொழில் தொடர்பாக எடுத்த முயற்சிகளில் வெற்றி நிச்சயம். நிர்வாகத் திறமைக்கு பாராட்டுக்களும் கிடைக்கும். தன வரவில் இருந்த தடைகள் அகலும். வியாபார விருத்திக்கு புதிய முதலீடுகள் வந்து சேரும். கடன் பிரச்சினைகள் படிப்படியாகத் தீர்ந்து மன நிம்மதி அடைவீர்கள்.
கடக - புதன்
ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்குப் புதன் செல்கிறார். உங்கள் ராசிநாதன் லாப ஸ்தானத்திற்கு வரும்போது, செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெளிநாடு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடல் வணிகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். ஆதாயம் தரும் தகவல்களை அதிகமாக நண்பர்கள் கொண்டு வந்து சேர்ப்பர். புதிய வாகனங்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். உத்தியோகத்தில் உங்கள் அறிவுத்திறமையை கண்டு அதிகாரிகள் வியப்பர். தொழில் வெற்றிநடை போடும். இல்லத்திற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகள் பலன் தரும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு தொழிலை அபிவிருத்தி செய்ய உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவாக இருப்பர். வெளிநாடு சென்று பணிபுரிய நினைப்பவர்களுக்கு அந்த முயற்சி கைகூடும். கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களின் அறிமுகத்தால் ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிதரும். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நல்ல வரன்கள் கைகூடும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 17, 18, 21, 22, 27, 28, ஜூலை: 13, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- கிரே.