கன்னி - தமிழ் மாத ஜோதிடம்
தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை
பிறரின் நம்பிக்கைக்கு பாத்திரமாக விளங்கும் கன்னி ராசி நேயர்களே!
தை மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். குருவின் பார்வையும் உங்கள் ராசியில் பதிவதால் ஆரோக்கியம் சீராகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும்.
மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன் 4-ம் இடத்தில் அமர்ந்து 10-ம் இடத்தைப் பார்க்கிறார். எனவே தொழில் முன்னேற்றம் ஏற்படும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக்கொள்வீர்கள். நீடித்த நோய் அகலும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன், சனி, சுக்ரன் மூவரும் இணைந்திருக்கின்றனர். சப்தம ஸ்தானத்தில் குருவும், ரிஷபத்தில் செவ்வாயும் இருக்கிறார்கள். 2-ல் கேது, 8-ல் ராகு இருந்து சர்ப்ப தோஷத்தை உருவாக்கினாலும், குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் பாதிப்புகள் ஏற்படாது. கேதுவோடு, மனதுகாரகன் சந்திரனும் இருப்பதால் இடையிடையே மனக்குழப்பம் அதிகரிக்கும். ஆன்மிகப் பெரியவர்களின் ஆலோசனைகளும், அனுபவஸ்தர்களின் அறிவுரையும் உங்கள் வாழ்க்கைப் பாதையை சீராக்கிக் கொடுக்கும்.
சூரியன் - சனி சேர்க்கை
உங்கள் ராசிக்கு 12-க்கு அதிபதியானவர் சூரியன். 5, 6 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். 6, 12 ஆகிய இடங்களின் அதிபதிகள் இணைந்திருப்பது 'விபரீத ராஜயோக'மாகும். எனவே திட்டமிடாத காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திடீர், திடீரென நல்ல தகவல் வரும். ரொக்கத்தால் வந்த சிக்கல்கள் அகலும். நோய் நொடியில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். தொழில் வளர்ச்சி திருப்தி தரும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல் வரலாம். வருமானப் பற்றாக்குறை அகன்று வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள்.
5-க்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால் பிள்ளைகளின் முன்னேற்றம் கண்டு பெருமைப்படுவீர்கள். பட்ட மேற்படிப்பிற்காக அவர்கள் வெளிநாடு செல்ல நினைத்தால் அதற்காக எடுக்கும் முயற்சி கைகூடும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. எப்பொழுதோ வாங்கிப் போட்ட சொத்துக்கள் பலமடங்கு விலை உயர்ந்து மகிழ்ச்சி தரும். உறவினர்களின் ஒத்துழைப்பால் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.
கும்ப - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், தை 9-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். அவர் 6-ம் இடத்திற்கு வரும் பொழுது கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை பாதிக்கு மேல் குறையும். எனவே நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் பழைய பங்குதாரர்களை விலக்கிவிட்டு, நீங்களே நடத்த முன்வருவீர்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள்.
மகர - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிநாதன் புதன், தை 21-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு செல்லும் புதனால் நல்ல நேரம் தொடங்குகிறது. வருமானம் உயரும். வாழ்க்கைப் பாதை சீராகும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் விரும்பிய இடத்திற்கு மாறுதல் கிடைக்கும். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. தொழில் ஸ்தானாதிபதியாகவும் புதன் விளங்குவதால் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். இல்லத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.
இம்மாதம் வராஹி வழிபாடு வளர்ச்சியை அதிகரிக்கச் செய்யும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜனவரி: 15, 16, 19, 20, 31, பிப்ரவரி: 1, 5, 6, 11, 12.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பொன்னிற மஞ்சள்.