கன்னி - தமிழ் மாத ஜோதிடம்


கன்னி - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாத ராசி பலன்கள் 16-12-2022 முதல் 14-01-2023 வரை

நிதானமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று சொல்லும் கன்னி ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் கேதுவும், 8-ம் இடத்தில் ராகுவும் சஞ்சரிக்கிறார்கள். குரு பார்வை முறையாக உங்கள் ராசியில் பதிகின்றது. எனவே திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நடைபெறும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். கல்விக்கேற்ற வேலை கிடைக்கும். கடமையில் இருந்த தொய்வு அகலும். வருமானம் திருப்தி தரும்.

புதன் வக்ர இயக்கம்

உங்கள் ராசிக்கும், 10-ம் இடத்திற்கும் அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது நன்மைகள் அதிகம் நடைபெறும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவதால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். இல்லம் கட்டிக் குடியேறும் யோகம் உண்டு. மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் வாய்ப்பு உண்டு. தங்கு தடைகள் தானாக விலகும். தைரியத்தோடு செயல்புரிவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும்.

மகர-சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் 5-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது, பிள்ளைகள் வழியில் சுபச்செய்திகள் வந்து சேரும். படித்து முடித்து வேலை இல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கும். வெளிநாடு சென்று படிக்க வேண்டுமென்று விரும்பியவர்களுக்கு அதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டு. வெளிநாடு செல்லும் யோகம் சிலருக்கு வாய்க்கும். குடியிருக்கும் வீட்டை விலைக்கு வாங்கும் யோகம் உண்டு. வாழ்க்கைத் துணையின் பேரில் இடம், பூமி வாங்கும் யோகம் ஏற்படலாம்.

புதன் வக்ர நிவர்த்தி

மார்கழி 24-ந் தேதி, தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன் வக்ர நிவர்த்தியாவதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அதிக முயற்சி செய்தும் முடிவடையாத காரியங்கள், இனி எளிதில் முடிவடையும். நல்ல சந்தர்ப்பங்களை உபயோகப்படுத்திக் கொள்வீர்கள். நண்பர்கள் வாயிலாக வருமானம் கிடைக்க வழிபிறக்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சிறு பிரச்சினையின் காரணமாக அதில் இருந்து விலகிக் கொள்ள முன்வருவீர்கள். விருப்ப ஓய்வில் வெளிவந்து நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து சுயதொழில் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பெற்றோர் உடல்நலத்தில் கவனம் தேவை. பணிபுரியும் இடத்தில் சகப் பணியாளர்களால் ஏற்பட்ட தொல்லை அகலும்.

செவ்வாய் வக்ர நிவர்த்தி

மார்கழி 29-ந் தேதி, ரிஷபத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாகிறார். இது அவ்வளவு நல்லதல்ல. உங்கள் ராசிக்கு 3, 8 ஆகிய இடங்களுக்கு அதிபதி வலுவடைவதால் விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம் தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படும். குறிப்பாக உடன்பிறப்புகளின் பகை அதிகரிக்கும். அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள். வழக்குகள் இழுபறி நிலையில் இருக்கும். வருமானப் பற்றாக்குறையின் காரணமாக ஒருசிலர் கடன் வாங்கும் சூழ்நிலையும் உண்டு.

உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியாக விளங்கும் செவ்வாய் வக்ர நிவர்த்தியாவதால் இழப்புகளும், விரயங்களும் கூடுதலாக இருக்கும். எதிர்காலம் பற்றிய கவலை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்காது. சென்ற மாதத்தில் ஏற்பட்ட பஞ்சாயத்துக்கள் மீண்டும் தொடரும். பொருளாதாரப் பற்றாக்குறையின் காரணமாக ஒருசிலருக்கு மன அழுத்தம், நிம்மதி குறைவு ஏற்படலாம். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்பட வேண்டிய நேரம் இது. பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளின் கெடுபிடி அதிகரிக்கும்.

இம்மாதம் ராமபிரான் வழிபாடு நன்மையை வழங்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 19, 20, 23, 24, ஜனவரி: 4, 5, 8, 9. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் குரு பார்வை உங்கள் ராசியில் பதிவதால் பொருளாதார நிலை உயரும். புதிய திருப்பங்கள் ஏற்படும். கணவன் - மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு அகலும். பிள்ளைகளால் நன்மை உண்டு. படித்து முடித்த பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் வருமானம் வரும். தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். உறவினர்களின் ஆதரவும், உள்ளம் மகிழப் பழகிய நண்பர்களின் ஆதரவும் மாதத்தின் பிற்பகுதியில் உண்டு. பணிபுரியும் பெண்களுக்குச் சாதகமான சூழ்நிலை அமையும்.


Next Story