ரிஷபம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


ரிஷபம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
x
தினத்தந்தி 8 Oct 2023 12:15 AM IST (Updated: 8 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

8.10.2023 முதல் 25.4.2025 வரை

ரிஷப ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், அக்டோபர் 8-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 11-ம் இடமான லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதே நேரம் கேது பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு வருகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அந்த இடத்திலேயே சஞ்சரித்து, அங்குள்ள நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.

11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வரும் ராகு, உங்களின் பணத்தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்வார். அதனால் வியாபாரத்தில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிக்கு கடனுதவி கிடைக்கும். பிள்ளைகளாலும் உதிரி வருமானம் வரும். 'தொழில் கூட்டாளிகளை விலக்கிவிட்டு தனித்து இயங்கலாமா?' என்று சிந்திப்பீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வந்துசேரும்.

பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். பூர்வீக சொத்துக்களில் ஒரு பகுதியை விற்று விட்டு, புதிய சொத்துக்கள் வாங்கி அதை விரிவு செய்வீர்கள்.

குரு மற்றும் சனி வக்ர காலம்

8.10.2023 முதல் 20.12.2023 வரை மேஷ ராசியிலும், 25.9.2024 முதல் 22.1.2025 வரை ரிஷப ராசியிலும் குரு வக்ரம் பெறுகிறார். அஷ்டம- லாபாதிபதியான குரு வக்ரம் பெறும் பொழுது நன்மையும், தீமையும் கலந்தே நடைபெறும். இழப்புகளை ஈடுசெய்ய புதிய வாய்ப்புகள் வந்துசேரும். வீடு மாற்றம் இனிமை தரும். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரும். ஒரு சிலருக்கு பணி நிரந்தரம் ஆகும்.

8.10.2023 முதல் 24.10.2023 வரை மகர ராசியிலும், 10.7.2024 முதல் 5.11.2024 வரை கும்ப ராசியிலும் சனி வக்ரம் பெறுகிறார். அவர் வக்ரம் பெறும் காலங்களில் மனக்குழப்பம் அதிகரிக்கும். தொழிலில் குறுக்கீடு சக்திகளால் நெருக்கடிகள் கூடும். பணப் பொறுப்பு பகையை வளர்க்கலாம். குடும்பத்தில் மருத்துவச் செலவு கூடும். மறைமுக எதிர்ப்பை சமாளிக்க வேண்டியதிருக்கும்.

சனிப்பெயர்ச்சி காலம்

20.12.2023 அன்று கும்ப ராசிக்கு சனி பகவான் செல்கிறார். இந்தப் பெயர்ச்சி உங்களுக்கு சாதகமாகவே அமையும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நடைபெறும். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. அசையா சொத்து வாங்குவதில் ஆர்வம் கூடும். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்பு கிடைக்கும். பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும்.

குருப்பெயர்ச்சி காலம்

1.5.2024 அன்று உங்கள் ராசிக்கு குரு பகவான் வருகிறார். அப்பொழுது அவரது பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகவான் பகை கிரகம் என்றாலும், குரு பகவானின் பார்வைக்கு பலன் உண்டு. அந்த வகையில் பிள்ளைகளின் சுப காரியம் நடைபெறும். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர வழிபிறக்கும். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு.

பெண்களுக்கான பலன்கள்

ராகு-கேது பெயர்ச்சியின் விளைவாக நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். செல்வநிலை உயரும். கணவன் - மனைவி ஒற்றுமை பலப்படும். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. வாரிசுகளின் வளர்ச்சி மகிழ்ச்சி தரும். சனி வக்ர காலத்தில் கூடுதல் கவனம் தேவை. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு உண்டு.

வளர்ச்சி தரும் வழிபாடு

லாப ஸ்தானத்திற்கு வரும் ராகுவால் செல்வநிலை உயரவும், பஞ்சம ஸ்தானத்திற்கு வரும் கேதுவால் பணியில் இருந்த தொய்வு அகலவும், சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள்.


Next Story