ரிஷபம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்


ரிஷபம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை

சமூக சேவையில் ஆர்வம் காட்டும் ரிஷப ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் கூட்டுக்கிரக யோக அமைப்பில் சஞ்சரிக்கிறார். சுக ஸ்தானத்தில் 5 கிரகங்கள் சேர்க்கை பெற்றிருக்கின்றன. அதோடு, 'சுக்ர மங்கல யோகம்', 'புத சுக்ர யோகம்', 'புத ஆதித்ய யோகம்' போன்ற யோகங்களும் இருப்பதால் தடைகள் தானாக விலகும்.

கடக - சுக்ரன்

ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வக்ர இயக்கத்தில் செல்கிறார். உங்கள் ராசிநாதனாகவும், 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், அவர் வக்ரம் பெறுவது ஒரு வகையில் நன்மைதான். 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்க நேரிடும். சகோதர வழியில் இருந்த பிரச்சினைகள் அகன்று மன மகிழ்ச்சியை வழங்கும். உத்தியோகத்தில் பணி நீடிப்பும், கூடுதல் பொறுப்புகளும் வருவதற்கான அறிகுறி தென்படும்.

கன்னி - செவ்வாய்

ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்திற்கு அதிபதியான செவ்வாய் 5-ம் இடத்திற்கு வருவதால் பிள்ளைகள் வழியில் விரயங்கள் ஏற்படலாம். அவற்றை சுப விரயங்களாக மாற்றிக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். வேலைவாய்ப்பிற்கான முயற்சிகளைச் செய்தல், கல்யாணக் கனவுகளை நனவாக்குதல் போன்ற சுப காரியங்களில் கவனம் செலுத்தலாம். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு.

மகர - சனி

சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அங்கு சுமார் 4 மாத காலம் சஞ்சரித்த பின்னர், மீண்டும் கும்ப ராசிக்கு செல்லப்போகிறார். வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றம் உங்கள் வளர்ச்சியில் திடீர் முன்னேற்றங்களை ஏற்படுத்தப் போகிறது. முன்பு மகரத்தில் சஞ்சரித்த பொழுது கொடுக்காத சில பலன்களை, சனி பகவான் இப்பொழுது வழங்குவார். குறிப்பாக அண்ணன், தம்பிகளுக்குள் ஏற்பட்ட மனவருத்தங்கள் மாறும். தந்தை வழி ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும். சிந்தனைகள் வெற்றி பெற செல்வந்தர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உங்கள் சந்ததிகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்து சேரும்.

புதன் வக்ர நிவர்த்தி

சிம்மத்தில் வக்ரமாக சஞ்சரித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகி பலம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். தன - பஞ்சமாதிபதியான புதன் பலம்பெறுவது யோகம்தான். பொருளாதாரத்தில் உச்சநிலை அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். வீடு கட்டும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு லாபம் வந்துசேரும் நேரம் இது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்குப் பணி நீடிப்பும், கூடுதல் பொறுப்புகளும் உண்டு. கலைஞர்களுக்கு கவுரவம், அந்தஸ்து உயரும். மாணவ- மாணவிகளுக்கு கல்வியில் தேர்ச்சியும், நல்ல பெயரும் கிடைக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். கொடுக்கல்-வாங்கல்கள் ஒழுங்காகும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 18, 19, 29, 30, செப்டம்பர்: 2, 3, 13, 14.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.


Next Story