ரிஷபம் - ஆனி தமிழ் மாத ஜோதிடம்


ரிஷபம் - ஆனி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 2:00 PM IST)
t-max-icont-min-icon

ஆனி மாத ராசி பலன்கள் 16-06-2023 முதல் 16-07-2023 வரை

மனதில் நினைத்ததை மறுகணமே செய்ய நினைக்கும் ரிஷப ராசி நேயர்களே!

ஆனி மாதக் கிரக நிலைகளைஆராய்ந்து பார்க்கின்ற பொழுது, உங்கள் ராசிநாதன் சுக்ரன் சகாய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அவரோடு விரயாதிபதி செவ்வாய் இருப்பதால் விரயங்கள் அதிகரிக்கும். அதே நேரத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. பயணங்கள் அதிகமாகும். ஒரு சிலருக்கு இடமாற்றம், வீடு மாற்றம் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சினைகள் குறையும். மனதை உறுத்திய சில பிரச்சினைகளுக்குத் தெளிவான முடிவெடுக்கும் நேரம் இது.

மிதுன - புதன்

ஆனி 3-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். அது அவருக்கு சொந்த வீடாகும். தனாதிபதி வலிமையடையும் இந்த நேரம் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். வருமானப் பற்றாக்குறை அகல புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபார நுணுக்கங்களை அறிந்து கொண்டு அதை மேம்படுத்துவீர்கள். அரசாங்கம் மூலம் நடைபெறும் காரியங்கள் சாதகமாக இருக்கும். மேலும் மிதுனத்தில் உள்ள சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குவதால் கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு தலைமைப் பொறுப்புகள் தானாக வந்துசேரும்.

சிம்ம - செவ்வாய்

ஆனி 17-ந் தேதி, சிம்ம ராசிக்கு செவ்வாய் செல்கிறார். அப்பொழுது குருவின் பார்வை செவ்வாய் மீது பதிகிறது. எனவே 'குரு மங்கல யோகம்' உருவாகிறது. இதன் விளைவாக தாய் வழி ஆதரவு கிடைக்கும். தக்க விதத்தில் உடல்நலம் சீராகும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. பத்திரப்பதிவில் இருந்த தடை அகலும். நீண்டதூரப் பயணங்கள் சாதகமாக அமையும். சிம்மத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய், கும்பத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். எனவே இக்காலத்தில் நவக்கிரகப் பரிகாரங்களைச் செய்வதன் மூலம் நற்பலன்களை வரவழைத்துக் கொள்ள இயலும்.

சிம்ம - சுக்ரன்

ஆனி 18-ந் தேதி, சிம்மத்திற்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கல யோக'த்தை உருவாக்குகிறார். இது ஒரு பொற்காலமாகும். தொட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும். தொல்லை தந்தவர்கள் விலகிச்செல்வர். குருவின் பார்வை பதிந்த செவ்வாய், சனியைப் பார்ப்பதால் கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வந்துசேரும். கணவன் - மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம்.

கடக - புதன்

ஆனி 19-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், சகாய ஸ்தானத்திற்கு வரும்பொழுது குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். கொடுக்கல் - வாங்கல்கள் சீராக அமையும். பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், கடல் தாண்டிச் சென்று மேற்படிப்பு படிப்பது சம்பந்தமாகவும் எடுத்த முயற்சி கைகூடும். பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும்.

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு மாதத்தின் பிற்பாதியில் புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். மாணவ - மாணவிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள். பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் இருந்த குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த இலாகா மாற்றம் உண்டு.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 18, 19, 24, 25, ஜூலை:- 3, 6, 9, 10.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.


Next Story