ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
வைகாசி மாத ராசி பலன்கள் 15-05-2023 முதல் 15-06-2023 வரை
விடாமுயற்சியே வெற்றிக்கு வழி என்று சொல்லும் ரிஷப ராசி நேயர்களே!
வைகாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் தன ஸ்தானத்தில் வீற்றிருக்கிறார். அதே நேரத்தில் விரய ஸ்தானத்தில் லாபாதிபதி குரு சஞ்சரிக்கிறார். எனவே விரயங்கள் மிக அதிகமாக இருக்கும் என்றாலும், அதற்கேற்ப வரவும் வந்து கொண்டேயிருக்கும். வருமானத்தை பொறுத்தவரை கவலைப்படத் தேவையில்லை. சுப காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறப் போகிறது. வீடு கட்டுவது, வாகனம் வாங்குவது போன்றவற்றில் ஈடுபாடு காட்டுவீர்கள். தொழில் ஸ்தானத்தில் சனி பலம் பெற்று இருப்பதால், எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் அதில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். சூரிய பலத்தால் பொதுவாழ்வில் புகழ் கூடும்.
ராகு-கேது சஞ்சாரம்
பின்னோக்கிச் செல்லும் கிரகங்களான ராகு பகவான், உங்கள் ராசிக்கு 12- ம் இடமான விரய ஸ்தானத்திலும், கேது பகவான் 6-ம் இடத்திலும் சஞ்சரிக்கின்றனர். இதன் விளைவாகப் பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். குருவோடு இணைந்திருக்கும் ராகுவால் ஓரளவு நற்பலன்களை எதிர்பார்க்கலாம். அதே நேரம் கேது பகவான் ஆறில் இருப்பதால் மனச்சஞ்சலங்கள் அதிகரிக்கும். சில நல்ல வாய்ப்புகள் கைநழுவிச் செல்லலாம். விலை உயர்ந்த பொருட்கள், அடிக்கடி பழுதாகி வேதனையைத் தரும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் கிடைத்து மனச்சஞ்சலத்தை அதிகரிக்க வைக்கும். சங்கிலித் தொடர்போல கடன் சுமை அதிகரிக்கும்.
கடக - சுக்ரன்
வைகாசி 16-ந் தேதி கடக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். அங்குள்ள செவ்வாயோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். சகோதர ஸ்தானம் பலப்படுவதால் உடன்பிறப்புகள் வழியில் நன்மை கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் திருமணம் கைகூடும். வழக்குகள் சாதகமாக அமையும். வருமானப் பற்றாக்குறை அகலப் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். பாதியில் நின்ற பல பணிகள், தற்போது துரிதமாக நடைபெறும். 6-ம் இடத்திற்கு அதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால், புதிய வேலை சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றிபெறும். கூடுதல் சம்பளத்துடன் வேலை கிடைக்கலாம். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும்.
ரிஷப - புதன்
வைகாசி 18-ந் தேதி, ரிஷப ராசிக்கு புதன் வருகிறார். அங்குள்ள சூரியனோடு இணைந்து 'புத ஆதித்ய யோக'த்தை உருவாக்குகிறார். எனவே கல்வி, கலை சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். ஒரு சிலர் இழந்த பதவிகளை மீண்டும் பெறுவர். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு ஒரு சில நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் எதிர்பார்த்தபடி வந்துசேரும்.
வியாபாரம், தொழில் செய்பவர்களுக்கு போதிய மூலதனம் கிடைத்து தொழிலை விரிவு செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணியாளர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். மேலிடத்து ஆதரவு கிடைக்கும். கலைஞர்களுக்கு சாதகமான நேரம் இது. பெண்களுக்கு மனதை அரித்த கவலை அகலும். மங்கல நிகழ்ச்சிகள் இல்லத்தில் நடைபெறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-மே: 16, 17, 22, 23, 27, 28, ஜூன்: 8, 9, 12, 13.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- நீலம்.