ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்


ரிஷபம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தை மாத ராசி பலன்கள் 15-01-2023 முதல் 12-02-2023 வரை

கடினமான வேலைகளைக் கூட எளிதாக செய்து முடிக்கும் ரிஷப ராசி நேயர்களே!

தைமாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன், பாக்கியாதிபதி சனியோடு இணைந்து பாக்கிய ஸ்தானத்திலேயே சஞ்சரிக்கிறார். எனவே இந்த மாதம் உங்களுக்கு யோகமான மாதம்தான்.

மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசியில் விரயாதிபதி செவ்வாய் இருக்கிறார். சப்தமாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்கும் செவ்வாய், உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் பொழுது குடும்பச்சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்கள் சரளமாக இருந்தாலும் விரயங்களே அதிகமாக ஏற்படும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு.

12-ம் இடத்தில் ராகுவும், 6-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். எனவே பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் உண்டு. உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ வெளிநாட்டில் பணிபுரிய அழைப்புகள் வரலாம். அஷ்டமத்தில் புதனும், 9-ம் இடத்தில் சூரியன், சனி, சுக்ரனும், லாப ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். மறைந்த புதனால் நிறைந்த தனலாபம் கிடைக்கும். பெற்றோர் வழி ஒத்துழைப்பும், பிள்ளைகளின் சுபகாரியங்களும் நடைபெறுவதற்கான வாய்ப்பு உண்டு.

சூரியன் - சனி சேர்க்கை

உங்கள் ராசிக்கு பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், சனி சேர்க்கை பெற்றிருக்கிறார்கள். பகைக் கிரகங்களின் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. ஆயினும் உங்கள் ராசி அடிப்படையில் சனி யோகம் செய்யும் கிரகம் என்பதால், பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. தாய் உடல்நலனில் கவனம் தேவை. வாகனங்களால் தொல்லை உண்டு.

பணிபுரியும் இடத்தில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்காது. சகப் பணியாளர்களால் சிறுசிறு இடர்பாடுகள் வரலாம். மேலதிகாரிகள் உங்களிடம் கூடுதல் பொறுப்பை ஒப்படைப்பர். அதனால் மன அமைதி குறையும். மேலும் உங்களிடம் கொடுத்த பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைப்பதன் மூலம், அது நடைபெறாமல் வீண்பழிகள் வரலாம். அரசுவழி வேலைக்கு முயற்சித்தவர்களுக்கு, அது கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கும்ப - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு அதிபதியான சுக்ரன் 6-ம் இடத்திற்கும் அதிபதியாவார். அவர் தை 9-ந் தேதி கும்ப ராசிக்குச் செல்கிறார். தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சுக்ரனால், உங்களின் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொல்லை தந்த எதிரிகள் விலகுவர். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பயணங்கள் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் உங்கள் எண்ணங்களைப் புரிந்து கொண்டு, கேட்ட உதவிகளைச் செய்து தருவார்கள்.

மகர - புதன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான புதன், வருகிற தை 21-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். அவர் பாக்கிய ஸ்தானத்திற்கு வரும்பொழுது மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். குறிப்பாகப் பொருளாதாரத்தில் பற்றாக்குறை அகலும். குடும்ப முன்னேற்றம் திருப்தி தரும். பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சிகள் வெற்றியாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான பஞ்சாயத்துக்கள் உங்களுக்குச் சாதகமாக அமையும்.

இம்மாதம் முருகப்பெருமான் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:-

ஜனவரி: 22, 23, 26, 27, பிப்ரவரி: 1, 2, 7, 8.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- மஞ்சள்.


Next Story