ரிஷபம் - ஐப்பசி தமிழ் மாத ஜோதிடம்
ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2023 முதல் 16-11-2023 வரை
கொடுத்த பணியை ஒழுங்காகச் செய்து பாராட்டுப் பெறும் ரிஷப ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் குருவால் பார்க்கப்படுகின்றார். குரு பகை கிரகமாக இருந்து பார்த்தாலும் அது வக்ர இயக்கத்தில் இருந்து பார்ப்பதால் நன்மைகள் அதிகம் கிடைக்கும். காரியங்கள் கடைசி நேரத்தில் கைகூடிவரும். கடமையைச் செவ்வனே செய்து பாராட்டுப் பெறுவீர்கள். பொருளாதார நிலை திருப்தி தரும். புதிய முயற்சிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். சென்ற மாதத்தைக் காட்டிலும் சிறப்பான மாதமாக இந்த மாதம் அமையப்போகின்றது.
சனி வக்ர நிவர்த்தி!
ஐப்பசி 6-ந் தேதி மகர ராசியில் சஞ்சரிக்கும் சனி வக்ர நிவர்த்தியாகின்றார். உங்கள் ராசிக்கு யோகம் செய்யும் கிரகம் சனி ஆவார். குறிப்பாக 9, 10-க்கு அதிபதியானவர் சனி என்பதால் பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகின்றது. எனவே சகல வழிகளிலும் உங்களுக்கு நன்மை கிடைக்கும். தனித்தியங்கி வருமானத்தைப் பெருக்கிக்கொள்ள முன்வருவீர்கள். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடுகள் கிடைக்கும். முக்கியப் புள்ளிகளின் ஆதரவோடு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகள் இணக்கமாக நடந்துகொள்வர். கருத்து மோதல்கள் அகலும். கவலைகள் தீரும்.
குரு வக்ரம்!
மாதம் முழுவதும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் வக்ரம் பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகம் என்பதால் அவர் வக்ரம் பெறுவது நன்மை தான். எதிர்பாராத சில நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறலாம். புதிய திருப்பங்கள் பலவும் காண்பீர்கள். புகழ்மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருந்து, செய்யும் தொழிலைச் சிறப்பாக நடைபெற வழிவகுத்துக் கொடுப்பர். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சியில் வெற்றி கிடைக்கும்.
நீச்சம் பெறும் சுக்ரன்!
ஐப்பசி 16-ந் தேதி கன்னி ராசிக்கு சுக்ரன் வருகின்றார். அங்கு அவர் வலிமை பெறுகின்றார். உங்கள் ராசிநாதன் நீச்சம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லைகள் ஏற்படாதிருக்க ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். உறவினர் பகை உருவாகலாம். 6-க்கு அதிபதியாகவும், சுக்ரன் விளங்குவதால் உத்தியோகத்தைப் பொறுத்தவரை பாதிப்பு ஏற்படாது. உங்களுக்கு இடையூறு செய்தவர்கள் விலகுவர். மேலதிகாரிகள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும்.
விருச்சிக புதன்!
ஐப்பசி 17-ந் தேதி விருச்சிக ராசிக்குப் புதன் வருகின்றார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்திற்கு வரும்பொழுது எல்லா வழிகளிலும் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும். இல்லத்தில் நல்ல சம்பவங்கள் நடைபெறும். புதிய ஒப்பந்தங்கள் வந்து பொருளாதார நிலையை உயர்த்தும். குடும்ப உறுப்பினர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு உருவாகும். பிள்ளைகளின் திருமண வாய்ப்புகளைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள்.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் கூடுதலாக வந்து சேரும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஒப்பந்தங்கள் வந்து மகிழ்ச்சியை உருவாக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கலைஞர்கள் கவுரவிக்கப்படுவர். மாணவ-மாணவியர்களுக்கு படிப்பில் மேன்மை உண்டு. பெண்களுக்கு குடும்ப ஒற்றுமை பலப்படும். வீடு மாற்றங்கள் இனிமை தரும். வருமானம் திருப்தி அளிக்கும். வாரிசுகளின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:அக்டோபர் 23, 24, 27, 28, நவம்பர் 2, 3, 7, 8.
மகிழ்ச்சி தரும் வண்ணம்: மஞ்சள்.