ரிஷபம் - குருப்பெயர்ச்சி பலன்கள்
பதினோராமிடத்தில் குரு பகவான்; பார்க்கும் தொழிலில் லாபம் வரும்
அற்புதமான ஆலோசனைகளை அள்ளி வழங்கும் ரிஷப ராசி நேயர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 13.4.2022 முதல் 11-ம் இடமான லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இது வருமானத்தை அதிகரிக்கச் செய்யும் இடமாகும். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். இது குருவிற்கு சொந்த வீடு என்பதால் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தன்னம்பிக்கையோடும், தைரியத்தோடும் செயல்பட்டு காரியங்களை முடிப்பீர்கள்.
குரு இருக்கும் இடத்தின் பலன்
குரு பகவான், லாப ஸ்தானத்தில் தன் சொந்த வீட்டில் சஞ்சரிக்கும் பொழுது வளர்ச்சி மீது வளர்ச்சி ஏற்படும். தனவரவு பெருகும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். சம்பாதிப்பதைப் பற்றி சிந்திக்காதவர்களுக்கு கூட வருமானம் வருவதற்கான வாய்ப்பு உருவாகும். இதுவரை 10-ல் சஞ்சரித்து பதவி மாற்றங்களை கொடுத்த குரு, இப்பொழுது சொந்த தொழில் செய்து சொகுசான வாழ்க்கை வாழ வழிவகுக்கப் போகிறார். அசையாச் சொத்துக்கள் வாங்குவதிலும் யோகம் உண்டாகும்.
குருவின் பார்வை பலன்
இந்த குருப்பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களை, குரு பார்க்கப் போகிறார். 3-ம் இடம் தைரிய ஸ்தானம் என்பதால், அதை குரு பார்க்கும்போது, துணிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சியில் இருக்கும் முட்டுக்கடைகள் அகலும். பேசிப் பேசி விட்டுப் போன பஞ்சாயத்துக்கள் இப்பொழுது நல்ல முடிவிற்கு வரும். உடன்பிறப்புகள் உங்களுக்கு அனுசரணையாக இருப்பர்.
குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது. எனவே பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைத்து அதை விரிவு செய்து பார்க்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.
7-ம் இடத்தைக் குரு பார்ப்பதால், களத்திர ஸ்தானம் புனிதமடைகிறது. எனவே இல்வாழ்க்கை இனிமை தருவதாக அமையப்போகிறது. திருமணத்தடை அகலும் நேரம் இது. கணவன்- மனைவிக்குள் பிணக்குகள் அகன்று இணக்கம் ஏற்படும்.
நட்சத்திரப் பாதசாரப்படி பலன்கள் சுய சாரத்தில் குரு சஞ்சாரம் (13.4.2022 முதல் 30.4.2022 வரை)
உங்கள் ராசிக்கு அஷ்டம, லாபாதிபதியானவர் குரு. அவர் பூரட்டாதி நட்சத்திரக் காலில், தன் சுய சாரத்தில் சஞ்சரிக்கும் பொழுது லாபத்தை வாரி வழங்குவார். அதே நேரம் அஷ்டமாதிபதி என்பதால் விரயத்தையும் வழங்குவார். தொட்டது துலங்கும். தொழில்வளம் சிறக்கும். உற்றார், உறவினர் உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு ஆச்சரியப்படுவர்.
சனி சாரத்தில் குரு சஞ்சாரம்(1.5.2022 முதல் 24.2.2023 வரை)
உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர், சனி பகவான். உத்திரட்டாதி நட்சத்திரக் காலில் சனியின் சாரத்தில் குரு சஞ்சரிக்கும்போது, அற்புதமான பலன்களை அள்ளி வழங்குவார். இக்காலத்தை ஒரு பொற்காலமாகக் கருதலாம். தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். பணவரவு திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் அடுக்கடுக்காக வரலாம். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும்.
புதன் சாரத்தில் குரு சஞ்சாரம் (25.2.2023 முதல் 22.4.2023 வரை)
உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவரது சாரத்தில் ரேவதி நட்சத்திரக் காலில் குரு சஞ்சரிக்கும்போது, பொருளாதார வளர்ச்சி திருப்தி தரும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவம் நடைபெறும். சுபகாரியப் பேச்சுக்கள் திடீரென வந்து மகிழ்விக்கும். பாதியில் நின்ற கட்டிடப் பணி மீதியும் தொடரும்.
குருவின் வக்ர இயக்கம் (20.7.2022 முதல் 16.11.2022 வரை)
இக்காலத்தில் குரு பகவான் சனியின் சாரத்தில் சஞ்சரித்து வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியாக சனி விளங்குவதால் இக்காலத்தில் மிகமிக கவனத்தோடு செயல்படுவது நல்லது. தொழில் போட்டி உருவாகும். புனிதப் பயணங்களில் தடை ஏற்படும். அதே நேரத்தில் அஷ்டமாதிபதியாக குரு விளங்குவது ஒருவழிக்கு நன்மைதான்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தக் குருப்பெயா்ச்சியின் விளைவாக பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும். பகையான உறவுகள் நட்பாகும். கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். உடல்நலம் சீராகும். மணமாலைக்காக காத்திருக்கும் உங்களின் பிள்ளைகளுக்கு மாலையும், நல்ல வேலையும் கிடைக்கும்.
வளம் தரும் வழிபாடு
இந்தக் குருப்பெயர்ச்சியால் இனிய பலன்கள் கிடைக்க இல்லத்து பூஜையறையில் குரு பகவான் படம் வைத்து குருகவசம் பாடி வழிபடுங்கள். சிறப்பு வழிபாடாக யோகபலம் பெற்ற நாளில் திருக்கடையூர் சென்று அபிராமி அம்மன், அமிர்தகடேஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.