விருச்சகம் - ஆண்டு பலன் - 2022
(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்:- தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவா்களுக்கும்)
வரவு அதிகரிக்கும், வசந்தம் உருவாகும்
விருச்சிக ராசி நேயர்களே!
பிறக்கும் புத்தாண்டு உங்களுக்குப் பெருமைகளை சேர்க்கும் ஆண்டாகவே அமையப் போகிறது. பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். புகழ்மிக்கவர்களின் பட்டியலிலும் இடம் பிடிப்பீர்கள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். வெற்றி வாய்ப்புகள் அடுக்கடுக்காக வீடு தேடிவரும். ஏப்ரல் மாதம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு சஞ்சரித்த பிறகு நினைத்த காரியங்களெல்லாம் நிறைவேறும். யோகபலம் பெற்ற நாளில் திசாபுத்திக்கேற்ற தெய்வங்களை வழிபட்டால் அடுக்கடுக்காக நன்மை வந்து சேரும்.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில், உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசியிலேயே பலம் பெற்றுச் சஞ்சரிக்கிறார். சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை தொழில் ஸ்தானத்தில் பதிவதால் தொழில் முன்னேற்றம் மேம்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கலாம். 2-ல் சூரியன் இருப்பதால் அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். பொதுவாழ்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கும். ஒருசிலருக்கு விருதுகள் கூட கிடைக்கலாம்.
ஜென்ம கேதுவின் ஆதிக்கத்தால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். சுபவிரயங்கள் ஏற்பட்டு மன மகிழ்ச்சியைக் கொடுக்கும். சப்தம ராகுவால் வாழ்க்கைத் துணை வழியே நல்ல தகவல் வரலாம். குறிப்பாக அவர்களின் வேலை வாய்ப்புகளுக்கு முயற்சி செய்தால் அது கைகூடும். பயணங்கள் பலன் தருவதாக அமையும். வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களிலிருந்து பணிபுரிய அழைப்புகள் வரலாம். சகாய ஸ்தானத்தில் சனி இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும்.
கும்ப குருவின் சஞ்சாரம்
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் இடமான சுக ஸ்தானத்தில் குருபகவான் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிகின்றது. எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும். வீடு, வாகனம் போன்றவை வாங்கும் யோகம் உண்டு. அதற்கு ஏற்ற விதம் பொருளாதார நிலை உயரும். நடக்கும் தொழிலை விரிவு செய்ய முயற்சிப்பீர்கள். பயன்தரும் விதத்தில் பயணங்கள் அமையும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். கல்வி சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும்.
ராகு-கேது பெயர்ச்சி
21.3.2022 அன்று, ராகு -கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் ராகுவும், 12-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 6-ல் ராகு இருந்து, குரு கேந்திரத்தில் இருந்தால் 'அஷ்டலட்சுமி யோகம்' செயல்படும். அந்த அடிப்படையில் ஏப்ரல் 13-ந் தேதிக்குள் மிகப்பெரிய வளர்ச்சியும், தொழில் முன்னேற்றமும், வருமானப் பெருக்கமும் ஏற்படலாம். வாடகைக் கட்டிடத்தில் நடைபெற்ற தொழிலை சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றும் எண்ணம் கைகூடும். கேது பலத்தால் குலதெய்வப் பிரார்த்தனை, இஷ்ட தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்கும் யோகம் உண்டு. வெளிநாட்டில் இருந்து ஆதாயம் தரும் தகவல் வந்துசேரும்.
குருப் பெயர்ச்சி
13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். அது குருவிற்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குருவின் பார்வை, உங்கள் ராசியில் பதிகிறது. இது ஒரு பொற்காலமாகும். எதைச் செய்ய நினைத்தாலும் அதை உடனடியாகச் செய்து முடிப்பீர்கள். வெற்றி தேவதை உங்கள் வீட்டில் குடிகொள்ளும் நேரம் இது. தொழில் வியாபாரத்தில் லாபம் குவியும். துணிந்து சில முடிவுகளை எடுத்து குடும்ப முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு பல நல்ல காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியம் சீராகும். இல்லத்தில் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும் வாய்ப்பு உண்டு.
சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்
25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 4-க்கு அதிபதியானவர் சனி. எனவே உடன்பிறப்புகளால் ஒரு சில தொல்லைகள் உருவாகலாம். கட்டிடப் பணியில் தாமதம் ஏற்படும். பணியாளர்களால் சில தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 2, 5 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ரத்தில் இருக்கும்பொழுது வரவைக் காட்டிலும் செலவு அதிகமாகும். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்பட்டாலும் காரியம் கடைசி நேரத்தில் கைகூடிவிடும். பிள்ளைகளால் பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். பல நாட்களாக நடைபெற்ற பாகப்பிரிவினை பேச்சில் தாமதம் ஏற்படும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்தப் புத்தாண்டு வளமானதாக அமைய சதுர்த்தி திதிகளில் விரதம் இருந்து ஆனைமுகப் பெருமானை வழிபாடு செய்யுங்கள்.
பெண்களுக்கான பலன்கள்
தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கப் போகின்றது. பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய பாதை புலப்படும். கணவன் - மனைவிக்குள் பாசமும், நேசமும் அதிகரிக்கும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு கூடுதல் நன்மை கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அசையாச் சொத்து வாங்கும் முயற்சி கைகூடும். தலைமைப் பொறுப்புகள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கப்பெறும்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி - செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை, செவ்வாயின் பார்வை சனி மீது பதிகின்றது. இரண்டு முரண்பாடான கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் அவ்வளவு நல்லதல்ல. எனவே இக்காலத்தில் கொஞ்சம் கவனமுடன் இருங்கள். குறிப்பாக செய்தொழிலில் புதியவர்களை நம்ப வேண்டாம். வாகன மாற்றம் செய்வது நல்லது. இடமாற்றங்களும், வீடு மாற்றங்களும் வரலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள்.