விருச்சகம் - ஆண்டு பலன் - 2022
(விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை)
பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவா்களுக்கும்
வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும்
விருச்சிக ராசி நேயர்களே!
இந்தப் புத்தாண்டு உங்களுக்கு செல்வ வளம் பெருக வைக்கப்போகிறது. பொருளாதார முன்னேற்றமும், புதிய முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். குருவின் பரிபூரண பார்வை உங்கள் ராசியில் பதியும் விதம் இந்த ஆண்டு தொடங்குவதால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக அமையும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் நட்பால் இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறும்.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் செவ்வாய், சுக்ரனோடு இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தை உருவாக்குகிறார். சூரியன் புதனுடன் இணைந்து 'புத ஆதித்ய யோகம்' ஏற்படுகிறது. செவ்வாயை சந்திரன் பார்ப்பதால் 'சந்திர மங்கள யோகம்' செயல்படுகிறது. குருவிற்கு 6-ம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 'சகட யோக'மும் உண்டாகிறது. குரு, சனி ஆகிய இரண்டு கிரகங்களும் தனது சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். மேலும் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசியில் பதிகிறது. எனவே வருமானம் உயரும்.
வெற்றிகள் ஸ்தானத்தில் சனி பலம்பெற்று வீற்றிருப்பதால் வெற்றி வாய்ப்புகள் வீடு தேடி வரும். சுற்றமும், நட்பும் பாராட்டும் விதத்தில் வாழ்க்கை அமையும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய திருப்பங்கள் வந்துசேரும். எதிரிகள் உதிரிகளாவர். பஞ்சாயத்துக்கள் சாதகமாகும். உடன்பிறப்புகளும், உடன் இருப்பவர்களும் உங்களுக்கு உறுதுணையாக விளங்குவர். தொழில் சூடுபிடிக்கும்.
சுக ஸ்தானத்தில் சுக்ரன், செவ்வாய் சேர்க்கை பெற்றிருக்கின்றன. 'சுக்ர மங்கள யோக'த்தின் பலனால், இல்லத்தில் மங்கல ஓசை, மழலையின் ஓசை கேட்க வழிபிறக்கும். குரு பார்வை பதியும் நேரத்தில் நீங்கள் செய்யும் பரிகாரங்கள் உடனடியாகப் பலன் கொடுக்கும். எனவே சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்து. அதில் பாக்கிய ஸ்தானத்திற்குரிய கிரக அடிப்படையில் தெய்வத்தை தேர்ந்தெடுத்து. யோகபலம் பெற்ற நாளில் அதற்குரிய ஆலயம் சென்று வழிபட்டு வந்தால் தடைகள் தானாக விலகும்.
ஆறாம் இடத்தில் சூரியனோடு புதன் இணைந்து 'புத ஆதித்ய யோகம்' உருவாவதால், அரசு வழியில் ஆதாயம் கிடைக்கும். அதிகார வர்க்கத்தினரின் ஆதரவோடு புது முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். 6-ல் ராகு இருப்பதால் 'அஷ்ட லட்சுமி யோக' அடிப்படையில் பொருளாதாரத்தில் உயர்வும், பொன் -பொருள் சேர்க்கையும் ஏற்படும். எதிர்கால நலன் கருதி நீங்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றிபெறும். தொழில் ஸ்தானாதிபதி சூரியன் உச்சம்பெற்றிருப்பதால் புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் நிறைவேறும்.
ஐந்தாம் இடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவான், உங்கள் ராசியைப் பார்ப்பதால் வசதி வாய்ப்புகள் பெருகும். வாகன யோகம் வந்துசேரும். வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது போன்றவற்றில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலில் எதிர்பார்த்ததைக் காட்டிலும் கூடுதல் லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை பங்கிட்டுக் கொள்ளும் முயற்சி பலன்தரும். பார்க்கும் குருவைப் பலப்படுத்த குரு பீடங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.
குருவின் பார்வை பலன்
ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசியிலும், 9, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. எனவே அந்த இடங்கள் புனிதமடைகின்றன. உடல் ஆரோக்கியம் சீராகும். கூட்டு முயற்சியில் இருந்து விலகித் தனித்து இயங்கும் ஆற்றல் பிறக்கும். உற்றார், உறவினர்களும் நண்பர்களும் உங்கள் முன்னேற்றம் கண்டு ஆச்சரியப்படுவர். தந்தை வழி ஆதரவு கிடைக்கும். தனவரவு திருப்தியாக இருக்கும். சகோதர வர்க்கத்தினர் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வர். பூர்வீக வீட்டைப் பழுது பார்த்து புதிய அமைப்பில் கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். முன்னோர்கள் செய்த தர்ம காரியங்களை தொடர்ந்து செய்ய வாய்ப்பு உருவாகும். தொழிலை விரிவுபடுத்தி கிளைத்தொழில் தொடங்க முயற்சிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் தானாகவே கிடைக்கும்.
சனியின் வக்ரமும், பெயர்ச்சிக் காலமும்
25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். சனியின் வக்ர காலத்தில் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை தேவை. குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்லுங்கள். விரயங்கள் அதிகரிக்கும். அதை சுபவிரயமாக மாற்றிக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனம். 29.3.2023-ல் கும்ப ராசிக்குச் சனி செல்கிறார். இதனால் அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் உருவாகிறது. எனவே இடமாற்றம், ஊர்மாற்றம், வீடு மாற்றம், வாகன மாற்றமும் செய்ய முன்வருவீர்கள். சனி சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. சனி பகவான் வழிபாட்டால் தொல்லைகளில் இருந்து விடுபட இயலும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
புத்தாண்டில் புகழும், பொருளும், குவிய சதுர்த்தியன்று விரதமிருந்து ஆனைமுகப்பெருமானை வழிபடுவது நல்லது.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் உங்களுக்கு தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை கூடும். செல்வ நிலை உயரும். கணவன் - மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். குரு பார்வையால் பல நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறப் போகின்றது. உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. பிள்ளைகளின் கல்வி மற்றும் கல்யாணம் சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். இதுவரை பரிசீலனையில் இருந்த பதவி வாய்ப்பு இப்பொழுது கிடைக்கும்.