தனுசு - சனிப்பெயர்ச்சி பலன்கள்


தனுசு - சனிப்பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 23 May 2022 3:11 PM IST (Updated: 23 May 2022 3:12 PM IST)
t-max-icont-min-icon

27-12-2020 முதல் 20-12-2023 வரை

குடும்பச் சனியின் ஆதிக்கம், வாழ்வில் கடுமை இனிக்குறையும்! தனுசு ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசியிலேயே ஜென்மச் சனியாக உலா வந்த சனிபகவான், இப்பொழுது 26.12.2020 அன்று இரண்டாமிடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். ஏழரைச்சனியில், ஜென்மச்சனி விலகி விட்டது. இப்பொழுது 'பாதச்சனி' என்று அழைக்கப்படும் குடும்பச்சனியின் ஆதிக்கம் தொடங்கிவிட்டது. எனவே குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். மங்கல ஓசை மனையில் கேட்கும். செல்வ வளம் சிறப்பாக இருக்கும்.

மகர ராசியில், ஏற்கனவே நீச்சம் பெற்ற குரு இருக்கிறார். அவரோடு சனி சேர்வதால் 'நீச்சபங்க ராஜயோகம்' ஏற்படுகிறது. மேலும் உங்கள் ராசிநாதன் 2-ம் இடத்தில் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கின்றார். எனவே பண வரவு திருப்தி தரும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் வந்த பிரச்சினைகள் அகலும்.

சுபகாரியங்கள் நிறைவேறும்

டிசம்பர் 26-ந் தேதி முதல் உங்கள் ராசிக்கு 2-ம் இடமான குடும்ப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனியால், குடும்பத்தில் இருந்த வேறுபாடுகள் அகலும். தள்ளிப்போன கல்யாண காரியங்கள் இப்பொழுது திடீரென முடிவாகி மகிழ்ச்சியை வழங்கும். விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். எதிரிகளின் தொல்லை குறையும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக மாறலாம். இடமாற்றங்கள் இனிமை தரும் விதத்தில் அமையும். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கேற்ற உயர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்போடு முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

சனியின் பார்வை பலன்கள்

உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானின் பார்வை, 4, 8, 11 ஆகிய இடங்களில் பதிவாகின்றது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைகின்றது. கல்வி முன்னேற்றம், சுகம், வாகனம், தாய்வழி உறவு, இழப்புகளை ஈடுசெய்யும் அமைப்பு, எதிர்பாராத இடமாற்றம், ஆரோக்கிய நிலை, வெளிநாட்டு முயற்சி, தொழிலில் லாபம், உத்தியோக உயர்வு போன்றவற்றை பற்றி அறிந்து கொள்ளும் இடங்களில் உங்களுக்கு யோகம் தரும் சனியின் பார்வை பதிகிறது. எனவே, அவைகளில் எல்லாம் உங்களுக்கு எதிர்பார்த்த நற்பலன்கள் கிடைக்கப் போகிறது. 4-ம் இட பார்வையால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். தாய்வழி ஆதரவு உண்டு.

சனியின் பார்வை அஷ்டம ஸ்தானத்தில் பதிவதால், ஆரோக்கியத் தொல்லை வரத்தான் செய்யும். ஆனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாது. இருப்பினும் சுய ஜாதகத்தை ஒருமுறை புரட்டிப் பார்த்துக்கொள்ளுங்கள். திசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது.

சனியின் பார்வை பதினோராமிடத்தில் பதிவதால், தொழிலில் திருப்திகரமான லாபம் வந்து சேரும். இந்த நேரத்தில் ஒருசிலருக்கு கிளைத்தொழில்கள் தொடங்கும் யோகமும் உண்டு. இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். வெளிநாட்டிலிருந்து அனுகூலமான தகவல் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வும், ஊதிய உயர்வும் இப்பொழுது கிடைக்கலாம். அரசு சார்ந்த பணிகளில் சேர விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு அது கைகூடும். அரசியல் பிரமுகர்களுக்கு மேலிடத்தின் ஆதரவும், நல்ல பொறுப்புகளும் கிடைக்கலாம். வாங்கிய கடனில் ஒரு பகுதியை கொடுத்து மகிழ்வீர்கள். வாகன யோகம் உண்டு.

சனியின் பாதசாரப் பலன்கள்

27.12.2020 முதல் 27.12.2021 வரை: சூரியன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, அரசியல் அனுகூலம் பெற்றவர்களின் ஆதரவோடும், உங்கள் வாக்கு வன்மையாலும் பல காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். பெற்றோர் வழியில் இருந்த மனவருத்தங்கள் மறையும். தந்தை வழியில் ஆதாயம் தரும் தகவல் உண்டு. பூர்வீக சொத்துக்களில் இருந்த பஞ்சாயத்துகள், நல்ல முடிவிற்கு வரும். சகோதர சச்சரவுகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் நீங்கள் கேட்ட சலுகைகள் கிடைக்கும். 'வீடு வாங்க வேண்டும்', 'வாகனம் வாங்க வேண்டும்' என்ற உங்களின் கனவு நனவாகப் போகின்றது. உஷ்ணாதிக்க நோய்கள் வந்து போகும்.

28.12.2021 முதல் 26.1.2023 வரை: சந்திரன் சாரத்தில் சனி சஞ்சரிக்கும் பொழுது, கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நேரமாகவே அமைகின்றது. அஷ்டமாதிபதியாக சந்திரன் விளங்குவதால் பொருளாதாரப் பற்றாக்குறை அதிகரிக்கும்.

27.1.2023 முதல் 19.12.2023 வரை: செவ்வாய் சாரத்தில் சனி சஞ்சரிக்கும்போது, பிள்ளைகள் வழியில் ஏற்பாடு செய்த கல்யாண முயற்சிகள் கைகூடும். பிள்ளைகள் மேற்படிப்பிற்காக வெளிநாடு செல்லவும், வெளிமாநிலம் செல்லவும் நீங்கள் செய்த முயற்சி கைகூடும். இக்காலத்தில் கும்ப ராசிக்குச் சனி செல்கின்றார். எனவே சுபவிரயங்கள் அதிகரிக்கும். வாங்கிய சொத்தை விற்றுவிட்டு புதிதாக வீடு வாங்கும் யோகம் உண்டு. உடல்நலம் சீராகும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

சனிப்பெயர்ச்சி காலத்தில் மூன்று முறை குருப்பெயர்ச்சி நடைபெற இருக்கின்றது. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் குரு வருகின்றார். எனவே சகோதரர்களால் நன்மை கிடைக்கும். வாழ்க்கைப் பாதையில் புதிய திருப்பம் உண்டாகும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வந்திணையலாம். தைரியத்தோடு எதையும் செய்வீர்கள். மீனத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கப்போகின்றார். எனவே தொழில் முன்னேற்றம் உண்டாகும். மித மிஞ்சிய பொருளாதாரம் ஏற்படும். மேஷத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, அதன் பார்வை உங்கள் ராசியில் பதியப் போவதால் உடல் நலம் சிறப்பாக இருக்கும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்

21.3.2022-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மேஷத்தில் ராகுவும், துலாத்தில் கேதுவும் சஞ் சரிப்பார்கள். இந்த காலகட்டத்தில் சொத்துக்களால் ஆதாயம் உண்டு. தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படத் தக்கதாக இருக்கும். கேது பலத்தால் வருமானம் திருப்தி தரும்.

8.10.2023-ல் நடைபெறும் ராகு-கேது பெயர்ச்சியின்போது, மீனத்தில் ராகுவும், கன்னியில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். இந்த நேரத்தில் தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. சகோதர ஒத்துழைப்பு குறையலாம். வாகன மாற்றம் வருவற்கான அறிகுறி தென்படும். தேக நலனுக்காக செலவிடும் சூழ்நிலை உண்டு. கேது பலத்தால் உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

வெற்றி பெற வைக்கும் வழிபாடு

வியாழக்கிழமை தோறும் குரு பகவானை வழிபடுவதோடு இல்லத்துப் பூஜை அறையில் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அனுமன் படத்தை வைத்து, அனுமன் கவசம் பாடி வழிபட்டால் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும்.

சனியின் வக்ர காலம்

12.5.2021 முதல் 26.9.2021 வரை, 25.5.2022 முதல் 9.10.2022 வரை, 27.6.2023 முதல் 23.10.2023 வரை என மூன்று முறை சனி வக்ரமடைகின்றார்.

இக்காலத்தில் சகோதர பாசம் குறையலாம். உங்களைச் சார்ந்து இருப்பவர்களால் பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. குடும்பத்தில் அமைதி குறையாமலும், உடன் இருப்பவர்களுடன் பகை ஏற்படாமலும் பார்த்துக் கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும்.

பெண்களுக்கான சிறப்புப் பலன்கள்

இந்த சனிப்பெயர்ச்சியால் பெண்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை அகலும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். குடும்ப உறவு பலப்படும். மங்கல காரியம் இல்லத்தில் நடைபெறலாம். கணவன் - மனைவிக்குள் அன்பும், பாசமும் அதிகரிக்கும். கடன்சுமை குறையும். தாய் மற்றும் சகோதரர்கள் தக்க விதத்தில் உதவி செய்வர். பிள்ளைகளால் பெருமை சேரும். அவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் அகலும். பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட இடத்திற்கு இடமாறுதல்களும், ஊதிய உயர்வும் உண்டு. பாதச்சனி நடைபெறுவதால் ஆரோக்கியத்தில் மட்டும் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டு அகலும். எதிலும் கவனமுடன் இருந்து கொள்வது நல்லது.


Next Story