மீனம் - ஆண்டு பலன் - 2022


மீனம் - ஆண்டு பலன் - 2022
தினத்தந்தி 23 May 2022 8:50 PM IST (Updated: 23 May 2022 8:51 PM IST)
t-max-icont-min-icon

(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்:- தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

மாற்றங்களால் ஏற்றம் ஏற்படும்

மீன ராசி நேயர்களே!

இந்தப் புத்தாண்டு உங்களுக்குத் தொடக்கத்திலேயே விரயங்களை உருவாக்கும். காரணம் உங்கள் ராசிநாதன் குரு, விரய ஸ்தானத்தில் அல்லவா சஞ்சரிக்கிறார். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு ஜென்ம குருவாக அவர் வருவதால், இடமாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் ஏற்படலாம். லாப ஸ்தானத்தில் சனி பலம் பெற்று இருப்பதால் பொருளாதாரம் தேவைக்கேற்ப வந்து சேரும். இருப்பினும் அனுபவஸ்தர்களை கலந்து ஆலோசித்து, எதையும் செய்தால் இந்த ஆண்டு இனிய ஆண்டாக அமையும்.

புத்தாண்டின் தொடக்க நிலை

புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, 12-ம் இடமான விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே வரவைக் காட்டிலும் செலவு கூடும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாவது கடினமாக அமையும். இடமாற்றங்கள் எதிர்பாராத விதத்தில் வரலாம். ஏற்றுக் கொள்ளக்கூடிய நிர்பந்தமும் இருக்கும். லாப ஸ்தானத்தில் புதன், சுக்ரன் சேர்க்கை இருக்கிறது. பாக்ய ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய் சேர்க்கை உள்ளது. எனவே 'புத சுக்ர யோக'மும், 'சந்திர மங்கள யோக'மும் செயல்படும்.

அடகு வைத்த நகைகளை மீட்டுக் கொண்டுவரும் வாய்ப்பு உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் கவனம் செலுத்துவீர்கள். 9-ல் கேது இருப்பதால் தந்தையின் உடல் நலத்தில் கவனம் தேவை. சகோதர ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால் உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுத்துக் கொடுப்பர். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு திடீர் திடீரென பொறுப்புகள் மாற்றப்பட்டுக் கொண்டேயிருக்கும். மக்கள் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ள பெரும் பிரயாசை எடுக்க நேரிடும்.

கும்ப குருவின் சஞ்சாரம்

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு பகவான், விரயஸ்தானத்தில் இருந்து கொண்டு 4, 6, 8 ஆகிய இடங்களைப் பார்க்கிறார். எனவே இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எடுத்த காரியங்களில் சிறு தடை இருந்தாலும் கடைசி நேரத்தில் அது கைகூடி விடும். சென்ற வருடத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுகட்ட ஒரு சில புதிய வாய்ப்புகள் வரலாம். பயணங்கள் பலன் தருவதாக அமையும். பாகப் பிரிவினைகளில் உடன்பிறப்புகள் இதுவரை ஒத்துழைப்பு தராமல் இருந்திருக்கலாம். ஆனால் இப்போது அந்த சூழ்நிலை மாறும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சி

21.3.2022 அன்று, ராகு-கேது பெயர்ச்சி நிகழவிருக்கிறது. உங்கள் ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். 2-ல் ராகு சஞ்சரிக்கும் பொழுது பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படும். என்றாலும் அஷ்டமத்தில் அல்லவா கேது சஞ்சரிக்கிறார். எனவே அடுக்கடுக்காக விரயங்கள் வந்து கொண்டேயிருக்கும். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். சங்கிலித் தொடர்போல கடன்சுமை வரலாம். புண்ணிய ஸ்தலங்களுக்கு அடிக்கடி சென்று வருவீர்கள். படிப்பு சம்பந்தமாக நீங்கள் எடுத்த முயற்சி கைகூடும்.

குருப்பெயர்ச்சி

13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிச் செல்கிறார். அது குருவிற்கு சொந்த வீடாகும். உங்கள் ராசிநாதன் ராசியில் சஞ்சரிக்கும் இந்த நேரம், நல்ல நேரமாகும். ஆரோக்கியத் தொல்லை அகலும். அடுத்தவர் நலன் கருதி எடுக்கும் முயற்சியில் ஆதாயம் கிடைக்கும். இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பீர்கள். புதிய தொழில் நிறுவனங்களில் இருந்து அழைப்புகள் வரலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். பற்றாக்குறை அகலும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவர்.

சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்

25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு லாபாதிபதியாகவும், விரயாதிபதியாகவும் விளங்குபவர் சனி பகவான். அவர் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது வரவும், செலவும் சமமாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த சில நல்ல காரியங்கள் இப்பொழுது நடைபெறலாம். ஒரு சில காரியங்களில் தடை ஏற்படத்தான் செய்யும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது.

8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதி வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. உடல் ஆரோக்கியத்தில் தொல்லைகள் அதிகரிக்கும். 'நினைத்ததை நினைத்த மாத்திரத்தில் செய்ய இயலவில்லையே' என்று கவலைப்படுவீர்கள். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக்கொள்வது உங்கள் புத்திசாலித்தனமாகும். தொல்லை தரும் எதிரிகளின் பலமும் கூடும். எனவே எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது.

வளர்ச்சி தரும் வழிபாடு

இந்தப் புத்தாண்டிற்குப் பிறகு வியாழக்கிழமை தோறும் குரு கவசம் பாடி, குரு பகவானை வழிபடுவது நல்லது.

பெண்களுக்கான பலன்கள்

புத்தாண்டில் விரயங்கள் கூடும். உறவினர்கள் வழியில் மனக்கசப்பு தரும் தகவல் வந்து சேரலாம். கணவன்- மனைவிக்குள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்பட்டால், குடும்பம் அமைதி காணும். குருப்பெயர்ச்சிக்குப் பிறகு உங்கள் எண்ணங்கள் படிப்படியாக நிறைவேறும். பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். விருப்பம் இல்லாத ஊர்களுக்கு இடமாற்றங்கள் ஏற்படும்.

கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்

26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி-செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை, செவ்வாயின் பார்வை சனியின் மீது பதிகின்றது. இரண்டு முரண்பாடான கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக 2, 9-க்கு அதிபதியாக செவ்வாய் விளங்குவதாலும், பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். தொழில் போட்டிகள் அதிகரிக்கும். துணிவும், தன்னம்பிக்கையும் குறையும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. உதவி செய்வதாகச் சொன்னவர்கள் கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம்.


Next Story