மீனம் - பிலவ ஆண்டு பலன்
14.4.2022 முதல் 13.4.2023 வரை
(பூரட்டாதி 4-ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்
இடமாற்றம் இனிமை தரும்
மீன ராசி நேயர்களே!
இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் குரு, ராசியிலேயே பலம்பெற்று சஞ்சரிப்பதால் ஆரோக்கியம் சீராகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லம் தேடி வரும். வருமானப் பற்றாக்குறை அகலும். வாகன மாற்றம், இடமாற்றம், தூரதேசப் பயணங்களால் ஆதாயம், புதிய நண்பர்கள் மூலம் தொழில் வளர்ச்சி போன்றவை ஏற்படும் நேரம் இது. ஆயினும் சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் சஞ்சலங்களும், மன அமைதிக் குறைவும் இருந்து கொண்டேயிருக்கும்.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு, உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பது யோகம்தான். சனியும் லாப ஸ்தானத்தில் சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். சூரியன், புதனோடு சேர்ந்து 'புத ஆதித்ய யோக'த்தையும், சுக்ரனோடு செவ்வாய் இணைந்து 'சுக்ர மங்கள யோக'த்தையும் உருவாக்குகின்றன. செவ்வாயை சந்திரன் பார்ப்பதால் 'சந்திர மங்கள யோக'மும், குருவிற்கு 6-ம் இடத்தில் சந்திரன் இருப்பதால் 'சகட யோக'மும் ஏற்படுகிறது. இத்தனை யோகங் களுக்கு மத்தியில் பிறக்கும் இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் குரு, சொந்த வீட்டில் இருப்பதுதான் சிறப்பு.
லாப ஸ்தானத்தில் சனி இருப்பதால் லாபம் சிறப்பாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர். புதிய பங்குதாரர்கள் வந்திணைந்து தொழிலை வளப்படுத்திக் கொடுக்க முன்வருவர். வெளிநாட்டில் இருந்து அனுகூலத் தகவல் வரலாம். பயணங்கள் அதிகரிக்கும். முன்னோர்களால் கட்டமைக்கப்பட்டு, தற்போது சிதிலமடைந்திருக்கும் கோவில்களை பராமரிக்க முன்வருவீர்கள்.
விரய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் சேர்க்கை பெற்றிருப்பது நன்மைதான். எட்டுக்கு அதிபதி சுக்ரன் பன்னிரண்டாம் இடத்தில் இருப்பதால் 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பதற்கு ஏற்ப, எதிர்பாராத சில முக்கிய முடிவுகளை எடுத்து அதை வெற்றியாக்குவீர்கள். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். வழக்குகள் சாதகமாகும். வாசல் வரை வந்து திரும்பிய வரன்கள், மீண்டும் வந்துசேரும். அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் கிடைக்கப்பெறும். தொழில் வளர்ச்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் சூரியன், புதன், ராகு ஆகிய மூன்று கிரகங்கள் இருக்கின்றன. எனவே கோபத்தின் காரணமாக சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடலாம். 'புத ஆதித்ய யோகம்' இருப்பதால் படிப்பில் மேன்மையும், விருது வாங்கும் வாய்ப்பும் கிடைக்கும். அஷ்டமத்தில் கேது இருப்பது நல்லதல்ல. ஒருசில காரியங்கள் நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாக இருக்கலாம். வாகனப் பழுதுகளால் வாட்டம் ஏற்படும். தெய்வ வழிபாடுகள் செய்வதில் கூட தாமதங்கள் உருவாகும். இக்காலத்தில் சர்ப்ப தோஷ நிவர்த்திக்குரிய பரிகாரங்களைச் செய்வது நல்லது.
ஜென்மத்தில் குரு இருப்பதால் இடமாற்றம், ஊர்மாற்றம், தூரதேசப் பயணம் போன்றவற்றில் மாற்றங்கள் உருவாகலாம். வரும் மாற்றத்தை உபயோகப்படுத்திக் கொள்வது நன்மைதான். உத்தியோகத்தில் உள்ளவர்கள், வேலைப்பளுவின் காரணமாக விலகுவது பற்றி சிந்திப்பார்கள். 'சுயதொழில் செய்யலாமா?' என்று நினைக்கும் நேரம் இது. ஆனால் ஏழரைச் சனியில் விரயச் சனியின் ஆதிக்கம் தொடங்கப்போவதால், கூட்டுத் தொழில் செய்வதே நல்லது. கூட்டாளியின் ஜாதகத்தையும் ஆராய்ந்து அவர்களை தேர்ந்தெடுத்துக் கொள்வது உத்தமம்.
குருவின் பார்வை பலன்
ஆண்டின் தொடக்கத்தில் மீனத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. பூர்வீக சொத்துத் தகராறுகள் அகலும். பிள்ளைகளின் முன்னேற்றம் பெருமைப்படும் வகையில் இருக்கும். குருவின் பார்வை 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால், இல்லத்தில் சுபகாரியங்கள் நடைபெற வழிபிறக்கும். உயர்அதிகாரிகள் உங்கள் எண் ணங்களுக்கு மதிப்புக் கொடுப்பர். வீடு மாற்றம் திருப்தி தரும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு அழைப்புகள் வரலாம். பார்க்கும் குருவைப் பலப்படுத்த, சிறப்பு தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது.
சனியின் வக்ர காலமும், பெயர்ச்சிக் காலமும்
25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். சனியின் வக்ர காலத்தில் விரயங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டு முயற்சி தடைப்படும். 29.3.2023-ல் கும்ப ராசிக்கு சனி செல்கிறார். இந்தப் பெயர்ச்சிக்குப் பின்னர், உங்கள் ராசிக்கு ஏழரைச் சனி தொடங்குகிறது. எனவே ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கலாம். வைத் தியச் செலவுகள் வாடிக்கையாகும். இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கையை மட்டும் தளரவிட்டு விடாதீர்கள்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்தப் புத்தாண்டில் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குருகவசம் பாடிக் குருவை வழிபடுவதோடு, அபிராமி அம்மன் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் உங்கள் ராசிநாதன் குரு, உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே உடல்நலம் சீராகும். உறவினர்களின் உதவி கிடைக்கும். உயர்ந்த மனிதர்களின் பழக்கத்தால் தொழில் முன்னேற்றம் உண்டு. கணவன் - மனைவி உறவில் அன்னியோன்யம் அதிகரிக்கும். எதிர் அணியில் நின்றவர்கள், விலகுவர். அசையாச் சொத்துக்களும், அழகான வாகனமும் வாங்கும் யோகம் உண்டு. பணிபுரியும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
17.5.2022 முதல் 25.6.2022 வரை மீனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பார்க்கிறார். 9.10.2022 முதல் 28.11.2022 வரை மிதுனத்தில் உள்ள செவ்வாய், மகரத்தில் உள்ள சனியைப் பாா்க்கிறார். மற்ற ராசிகளோடு ஒப்பிடுகையில் உங்களுக்கு சில நன்மைகளே நடைபெறும். இந்த இரண்டு கிரகங்களின் பார்வைக் காலத்தில் பொருளாதார நிலை உயரும். புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அருளாளர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கவலை விலகி, இன்பம் இல்லத்தில் குடியேறப்போகிறது.