துலாம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


துலாம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்
தினத்தந்தி 17 May 2022 1:24 PM IST (Updated: 17 May 2022 1:25 PM IST)
t-max-icont-min-icon

(சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை) பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்

ஏழில் வருகிறது ராகு; இல்லத்தில் செலவு கூடும் துலாம் ராசி நேயர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு பகவான், 7-ம் இடம் எனப்படும் களத்திர ஸ்தானத்தில் மார்ச் 21-ந் தேதி முதல் சஞ்சரிக்கப் போகிறார். அதே சமயம் கேது பகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வரப்போகிறார். சுமார் ஒன்றரை ஆண்டு காலம் ராகுவும், கேதுவும் அதே இடத்தில் சஞ்சரித்து, அங்குள்ள நட்சத்திரப் பாதசாரங்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார்கள்.

களத்திர ஸ்தான ராகு, ஜென்ம ராசியில் கேது

உங்கள் ராசிக்கு 7-ம் இடமான சப்தம ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கப்போகிறார். இதனை 'களத்திர ஸ்தானம்' என்பார்கள். திருமண வயதடைந்த ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் இக்காலத்தில் திருமணப் பேச்சுக்கள் வரத்தொடங்கும். 'ராகுவைப் போல கொடுப்பானுமில்லை' என்பதால், நிறைய வரன்கள் வந்து அலைமோதும். இருப்பினும் பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொண்டால்தான் வருத்தமில்லாத வாழ்க்கை அமையும். ஜென்மத்தில் கேது சஞ்சரிப்பதால் சிந்தனை ஆற்றல் அதிகரிக்கும். உறவினர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டாம். சமூகப் பற்று மிக்க உங்களுக்குப் பொறுப்புகளும், பதவிகளும் கிடைக்கலாம். அடிக்கடி உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு உற்சாகத்தை குறைக்கும். கவனம் தேவை. சர்ப்ப சாந்திப் பரிகாரங்களைச் செய்து கொள்வதன் மூலம் சகஜ நிலைக்கு வரலாம்.

சூரிய சாரத்தில் ராகு சஞ்சாரம் (21.3.2022 முதல் 22.5.2022 வரை)

கார்த்திகை நட்சத்திரக் காலில் சூரியன் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதார நிலை உயரும். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் இருந்து ஒரு சிலருக்கு அழைப்புகள் வரலாம். ஆடம்பரச் செலவு அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறைத்துக் கொண்டு செயல்படுங்கள். அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவோடு புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மித மிஞ்சிய பொருளாதாரமும், தொழிலில் புதிய ஒப்பந்தங்களும் வந்துசேரும்.

சுக்ரன் சாரத்தில் ராகுவின் சஞ்சாரம்(23.5.2022 முதல் 28.1.2023 வரை)

பரணி நட்சத்திரக் காலில் சுக்ரனின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, ராசிநாதன் சுக்ரனாக இருப்பதால் எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும். இடையூறு சக்திகள் அகலும். பணவரவில் இருந்த ஏற்ற இறக்க நிலை மாறும். அலைச்சலைக் குறைத்துக் கொள்வதன் மூலமும், நேரம் கடந்து உணவருந்துவதை தவிர்ப்பதன் மூலமும் உடல்நலத்தைச் சீராக்கிக் கொள்ளலாம். தங்கம், வெள்ளி போன்ற ஆபரண சேர்க்கை உண்டு. தன்னிச்சையாக செயல்பட்டு சில காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். திருமணம் போன்ற சுபகாரியங்கள் முடிவாகும். செல்வ வளம் மிக்க ஒருவரின் உதவி தக்க சமயத்தில் கிடைத்து மகிழ்ச்சி காண்பீர்கள்.

கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சாரம்(29.1.2023 முதல் 7.10.2023 வரை)

அசுவினி நட்சத்திரக் காலில் கேதுவின் சாரத்தில் ராகு சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் அமைதி குறையலாம். ஒருவரையொருவர் புரிந்து கொண்டு செயல்படுங்கள். உத்தியோக மாற்றங்களும், ஊர் மாற்றங்களும் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். பணத்தேவை அதிகரிக்கும். ஒருசிலருக்கு நீண்ட தூரத்திற்கு சென்று பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். முன்னோரின் சொத்துக்களை விற்பதில் சில தடைகள் அகலும். முகஸ்துதி பாடி காரியம் சாதிப்பவர்களை இனம் கண்டு கொள்வது நல்லது. அரசியலில் ஈடுபட்டிருப்பவர்கள் வீண்பழிக்கு ஆளா கலாம். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்ளுங்கள்.

குரு சாரத்தில் கேது சஞ்சாரம்(21.3.2022 முதல் 25.9.2022 வரை)

விசாக நட்சத்திரக் காலில் குருவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகள் கைகூடும். ஒருசிலருக்கு ஊர் மாற்றங்கள் ஏற்படலாம். நண்பர்களை நம்பி செய்த ஒருசில காரியங்கள் வெற்றிபெறாமல் போகலாம். உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு கிடைப்பது அரிது. தொழில் சம்பந்தமாக எடுத்த முயற்சியில் மாற்றினத்தவர்களின் பங்கு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினை நீடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைத்தாலும் திருப்தி ஏற்படாது. எந்தக் காரியத்தையும் முன்கூட்டியே யாரிடமும் சொல்லிவிட வேண்டாம். அதனால் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.

ராகு சாரத்தில் கேது சஞ்சாரம்(26.9.2022 முதல் 3.6.2023 வரை)

சுவாதி நட்சத்திரக் காலில் ராகுவின் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, வாழ்க்கைத் துணை வழியே கொஞ்சம் பிரச்சினைகள் ஏற்படலாம். விட்டுக் கொடுத்துச் செல்வதுதான் ஒரே வழி. வேலைப்பளு காரணமாக மனநிம்மதி குறையலாம். 'வீடு கட்டும் பணி பாதியில் நிற்கிறதே' என்று கவலைப்படுவீர்கள். கொடுக்கல் - வாங்கல்களில் பெரிய தொகையை கடனாக கொடுத்தால் யோசித்துக் கொடுப்பது நல்லது. ஆரோக்கியப் பாதிப்பிற்காகவும் செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணை பார்த்த வேலையில் மாற்றம் வரலாம். உறவினர்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் பணியில் மட்டுமே கவனமாக இருப்பது நல்லது.

செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சாரம்(4.6.2023 முதல் 7.10.2023 வரை)

சித்திரை நட்சத்திரக் காலில் செவ்வாய் சாரத்தில் கேது சஞ்சரிக்கும் பொழுது, பொருளாதாரத்தில் பற்றாக்குறை அகலும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் பிரச்சினையில் இருந்து விடுபடுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். 'வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்றுக் கொள்ளலாமா?' என்று யோசிப்பீர்கள். பெற்றோர்களின் அறிவுரையும், அனுபவம் உள்ளவர்களின் தொடர்பும் உங்களுக்கு புதிய ஆற்றலை வழங்கும்.

குருப்பெயர்ச்சிக் காலம்

ராகு-கேது பெயர்ச்சிக் காலத்தில், குரு பகவான் இரண்டு முறை பெயர்ச்சியாகிறார். அதன்படி வருகிற ஏப்ரல் 13-ந் தேதி மீன ராசிக்கு குரு பெயர்ச்சியாகி, உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களைப் பார்க்கப் போகிறார். எனவே சுபச்செய்திகள் வந்து சேரும். குடும்ப முன்னேற்றம் கூடும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். அடுத்ததாக 22.4.2023 அன்று மேஷ ராசிக்கு குரு பெயர்கிறார். அங்கிருந்து உங்கள் ராசியைப் பார்க்கிறார். இதனால் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும். துணையாக இருக்கும் நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர். நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். உடல் ஆரோக்கியம் சீராகும்.

சனிப்பெயர்ச்சிக் காலம்

16.3.2023 அன்று, கும்ப ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார். உங்கள் ராசிக்கு 5-ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு சனி வருகிறார். கும்பம் அவருக்கு சொந்த வீடு. எனவே பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அவை அனைத்தும் கிடைக்கும். பிள்ளைகளின் கல்யாணக் கனவுகளை நனவாக்குவீர்கள். பூர்வீக சொத்துத் தகராறு அகலும். புதிய பாதை புலப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அனுகூலத்தோடு அனைத்துச் செயல்களும் வெற்றிகரமாக முடியும். நாடு மாற்றங்கள், வீடு மாற்றங்களை எதிர்பார்ப்பவர்களுக்கு அது நிறைவேறும்.

பெண்களுக்கான பலன்கள்

இந்த ராகு - கேது பெயர்ச்சி, உங்களுக்கு விரயத்தைக் கொடுத்து மன நிம்மதியைக் குறைக்கலாம். குடியிருக்கும் வீட்டையே, ஒரு சிலர் விலைக்கு வாங்கும் யோகம் உண்டு. மேஷ குருவின் சஞ்சாரத்திற்குப் பிறகு மிகச் சிறந்த பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு கேட்ட இடத்திற்கு மாறுதல் கிடைக்காவிட்டாலும், கிடைத்த இடம் திருப்தி தருவதாக அமையும். கணவன் - மனைவி ஒற்றுமை பலப்பட, விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். ராகு - கேதுவிற்குரிய சர்ப்ப சாந்திப் பரிகாரம் செய்வதும் மேன்மை தரும்.


Next Story