சிம்மம் - ஆடி தமிழ் மாத ஜோதிடம்
ஆடி மாத ராசி பலன்கள் 17-07-2023 முதல் 17-08-2023 வரை
நம்பியவர்களுக்கு கைகொடுத்து உதவும் சிம்ம ராசி நேயர்களே!
ஆடி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சூரியன் விரய ஸ்தானத்தில் லாபாதிபதி புதனோடு இணைந்திருக்கிறார். எனவே தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபம் கிடைக்குமென்றாலும் விரயங்களும் அதிகரிக்கும். வீடு மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் போன்றவற்றைச் செய்ய முன்வருவீர்கள். கண்டகச் சனியின் ஆதிக்கம் இருந்தாலும் அது வக்ர இயக்கத்தில் இருப்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது. விட்டுக் கொடுத்துச்செல்வதன் மூலம் குடும்ப ஒற்றுமை பலப்படும்.
மேஷ - குரு சஞ்சாரம்
நவக்கிரகங்களில் சுபகிரகமாக விளங்கும் குரு பகவான், உங்கள் ராசியைப் பார்ப்பது யோகம்தான். அதிலும் 5-ம் பார்வையாக பார்க்கிறார். 'ஐந்தும், ஒன்பதும் மிஞ்சும் பலன் தரும்' என்பது ஜோதிட நியதி. எனவே பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புனிதப் பயணங்கள் அதிகரிக்கும். அருளா ளர்களின் ஆலோசனையால் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறுவீர்கள். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உயர் அதிகாரிகளின் பழக்கத்தால் நல்ல காரியங்கள் பலவும் நடைபெறும். 'ரண சிகிச்சை செய்தால்தான் நோய் குணமாகும்' என்று சொன்ன மருத்துவர்கள், இப்பொழுது சாதாரண சிகிச்சையிலேயே குணமாக்கி விடலாம் என்று சொல்வார்கள். தொழில் வளம் சிறப்பாக இருக்கும்.
குருவின் பார்வை சகோதர மற்றும் சகாய ஸ்தானத்திலும், பூர்வ புண்ணிய ஸ்தானத்திலும் பதிகின்றது. எனவே வியாபாரம் வெற்றி நடை போடும். வீடு, இடம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவிற்கு வரும். பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். எதிர்கால நலன்கருதி எடுத்த முயற்சிகளுக்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பர். உத்தியோகத்தில் உங்களுக்கென்று தனி மரியாதை கிடைக்கும். கடமையைச் செவ்வனே செய்து பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் செய்வோர், தனியாகத் தொழில் தொடங்குவது பற்றி ஆலோசிப்பீர்கள்.
சிம்ம - புதன்
ஆடி 7-ந் தேதி, சிம்ம ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு தன -லாபாதிபதியான புதன், உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் இந்த நேரம் மிகுந்த யோகமான நேரமாகும். வாய்ப்புகள் வாசல் தேடி வரும். வருமானம் உயரும். குடும்பத்தில் ஒருவருக்கு மேற்பட்டவர்களும் சம்பாதிக்கும் வாய்ப்பு உண்டு. ஆடை, அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பழைய பாக்கிகள் வசூலாகும். என்றைக்கோ குறைந்த விலைக்கு வாங்கிப் போட்ட இடம், இப்பொழுது அதிக விலைக்கு விற்று லாபத்தைக் கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இப்பொழுது விருப்ப ஓய்வு பெற்றுக் கொண்டு வெளியில் வரலாமா? என்று சிந்திப்பர். பொதுவாக தொட்ட காரியங்களில் வெற்றி பெறும் நேரம் இது.
பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அவர்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்கும். வியாபாரம், தொழில் புரிபவர்களுக்கு மாதக் கடைசியில் லாபம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கேட்ட சலுகைகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு சகக் கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். மாணவ -மாணவிகளுக்கு எதிர்பார்த்த துறை அமையும். பெண்கள் சந்தோஷ வாய்ப்புகளை சந்திக்க நேரிடும். தடைகள் அகன்றோடும். மாதத்தின் பிற்பகுதியில் உங்கள் எண்ணங்கள் ஈடேறும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூலை: 17, 23, 24, 27, 28, ஆகஸ்டு: 8, 9, 13, 14.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆனந்தா நீலம்