கண் திருஷ்டிக்கு பரிகாரம் உண்டா?


kan thirusti pariharam in tamil
x
தினத்தந்தி 16 July 2024 4:14 PM IST (Updated: 18 July 2024 12:25 PM IST)
t-max-icont-min-icon

மற்றவர்கள் நம்மை பொறாமை எண்ணத்தால் ஆச்சரியமாக பார்க்கும்போது அந்த கதிர்களுக்கு ஒரு வலிமை உண்டு. அது தீய வலிமையாக மாறி அந்த பார்வை பட்டு எதிர் விளைவுகளை தருகிறது.

குழந்தை பிறந்த உடன் அதற்கு அலங்கரிக்கும் போது தாய் அந்த குழந்தையின் கன்னத்தில் ஒரு பெரிய வட்ட வடிவில் மைப் பொட்டை வைப்பதை பார்த்திருப்பீர்கள். அது குழந்தைக்கு மற்றவர் கண் படாமல் இருப்பதற்கு என்று சொல்வதை நாம் கேட்டிருக்கின்றோம். அதே போல் புதிய வீடு கட்டுபவர்கள் வீட்டுக்கு வெளியே ஒரு அவலட்சணமான பொம்மையை கட்டி வைத்திருப்பதை நாம் பார்த்திருக்கின்றோம். அதற்கு காரணம் மற்றவர் கண்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். அதே போல இந்த கண் திருஷ்டியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா சொல்லுவாங்க. அதாவது கண்ணேறு, கண்ணுப்பட போகுது, ஒருத்தர் கண்ணுபோல ஒருத்தர் கண்ணு இருக்காதாம், கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என பெரியவங்க சொன்னத கேட்டிருப்பிங்க. இதெல்லாம் மூட நம்பிக்கையா அல்லது உண்மையா? என்பதை பார்ப்போம்.

கண் திருஷ்டி என்றால் என்ன?

திருஷ்டி என்றால் தீய பார்வை என்று பொருள். ஒருவரின் வளர்ச்சியை பொறுக்க முடியாதவர்களின் பார்வையில் தீய சக்தி உண்டு. இது தீய உணர்வால் ஏற்படுகிறது. ஒருவர் சாதனை செய்து பெயரும் புகழும் பெறும்போது அவர்களின் எதிரிகளுக்கு பொறாமை எண்ணம் உண்டாகிறது. அவர்கள் நம்மை ஆச்சரியமாக பார்க்கும்போது அதாவது அங்கலாயத்து பார்க்கும்போது அந்த கதிர்களுக்கு ஒரு வலிமை உண்டு. அது தீய வலிமையாக மாறி அந்த பார்வை நம் மீது பட்டு நமக்கு எதிர் விளைவுகளை தருகிறது. இதனை யாராலும் மறுக்க இயலாது. இதுவே நமக்கு பிடித்தவர்களின் ஆன்மா நம் வளர்ச்சியைக் கண்டு மகிழும்போது நமக்கு நன்மை விளைகிறது. எப்படி என்றால் தம் பெற்றோர்களின் பார்வையை உதாரணமாக சொல்லலாம். மேலும், பெரியவர்களின் ஆசிர்வாதம் அதாவது ஆன்மீகத்தில் உள்ளவர்களின் ஆசிர்வாதம் அவர்களின் பார்வை நமக்கு மேலும் மேலும் நன்மையைத் தரும். அதற்குத்தான் சித்தர்களின் ஜீவ சமாதிக்கு சென்று வருவதால் நம் பாவங்கள் போகின்றன என்பது ஐதீகம். மேலும், கோவில் குளங்களுக்குச் சென்று வருவதால் நம் மீதுள்ள தீய விளைவுகள் நீங்கி நன்மைகளைத் தருகின்றன.

கண் திருஷ்டி என்ன செய்யும்?

இதற்கு உதாரணமாக நாம் வீட்டில் எவ்வளவோ வேலையை செஞ்சிருப்போம். அப்போதெல்லாம் பெரிய அசதி ஆக இருக்காது. ஆனா நாம் வெளியே திருமணம் மற்றும் பல விசேஷங்களுக்குச் சென்று வருவோம். வீட்டுக்கு வந்த உடனேயே தலைவலி மற்றும் வாந்தி அல்லது உடம்பை அடித்தாற்போல் உடம்பெல்லாம் வலி ஏற்படுவதை நாம் கண்டிருப்போம். இவ்வளவுக்கும் நாம அங்க ஒரு வேலையும் பாத்திருக்க மாட்டோம். இதற்கு என்ன காரணம்னா, பல நூறு பேர் அங்க ஒருங்கே வந்திருப்பாங்க. அவ்வளவு பேர் கண்ணும் நம் மீது பதிந்திருக்கும். இவ்வளவு ஏங்க நாம நல்லா ட்ரஸ் பண்ணிட்டு ஒரு சில நபர்களிடம் பேசும்போது ட்ரஸ் சூப்பர்னு சொல்லி நம்மள பாராட்டும் போதே, டீயோ அல்லது வேற ஏதாவதோ கை தவறி நம் துணி மீது விழுந்து உடனே கறையாயிடும். அல்லது துணி கிழியும். அப்பவே நாம தெரிஞ்சுக்கலாம், கண் திருஷ்டி உள்ளதுன்னு.

அதே போல யாராவது ஒருவர் ஆ... என்று அங்கலாயத்து நம்மை பார்க்கும் போது அவன் ஆளை விழுங்குவது போல் பார்த்து விட்டான் சுத்தி போடனும் என்றும் சொல்வதை நாம் கேட்டிருக்கின்றோம்.

கண் திருஷ்டியை எப்படி கண்டுபிடிப்பது?

நமக்கு கண் திருஷ்டி ஏற்பட்டுள்ளதை நாம் எப்படி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், குழந்தைகளாக இருந்தால் அடிக்கடி அழுது கொண்டே இருக்கும். சரியாக சாப்பிடாது. உடல் மெலியும். பெரியவர்களுக்கு என்றால் குடும்பத்தில் சதா சண்டைச் சச்சரவுகள் ஏற்படும். அடிக்கடி உடல் உபாதை ஏற்படும், சதா மருத்துவ செலவுகள் கூடும். வீட்டில் தொடர் இறப்புகள், விபத்துக்கள் ஏற்படுதல், கணவன் மனைவிக்குள் தொட்டதெற்கெல்லாம் சண்டை ஏற்படும். தொடர் தோல்விகள் உண்டாகும். நாம் நன்கு உழைத்தாலும் அதற்கேற்ற பலன் கிடைக்காமல் போகும். வழக்குகள் ஏற்படுதல் மற்றும் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படுதல் போன்றவை உண்டாகும்.

ஜாதகத்திற்கும் கண் திருஷ்டிக்கும் தொடர்புண்டா?

இதனை ஜாதகரீதியில் நாம் ஆராய்ந்தால் ஒவ்வொரு கிரகங்களுக்கும் ஒவ்வொரு ஆதிக்கம் உண்டு. இந்த செய்வினை மற்றும் கண் திருஷ்டிக்கு என்று பார்ப்போமேயானால் ராகுவும் மாந்தியும் முக்கிய பங்கு வகிக்கிறது. அவரவர் ஜாதகத்தில் செய்வினை மற்றும் கண் திருஷ்டி இருக்கிறதா? என்பதை ஜாதகம் மூலமாகவும் அறிந்து கொள்ள இயலும். அவரவர் ஜாதகத்தில் மாந்தியின் நிலையை வைத்து கண்டு பிடிக்க இயலும். இந்த மாந்தி ஜாதகத்தில் இருக்கும் இடத்தை வைத்து நாம் எளிதாக கண்டு பிடித்து விடலாம். மேலும், அவரவர் ஜாதகத்தில் இந்த ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் என்ன கிரகம் உள்ளது மற்றும் அந்த ஸ்தானத்தை யார் பார்க்கிறார்கள் மற்றும் லக்னத்தில் பாப கிரகம் உண்டா இல்லையா போன்றவற்றையும் கொண்டுதான் திருஷ்டி உண்டா இல்லையான்னு தீர்மானிக்க இயலும். கண் திருஷ்டியை அகற்ற அவரவர் ஜாதகத்திற்கேற்ப போல பரிகாரங்களை முறைப்படி செய்வதன் மூலம் இந்த தீய சக்திகளிலிருந்து விடுபடலாம்.

எப்படி கண் திருஷ்டியை அகற்ற என்ன பரிகாரம் செய்யலாம்?

பரிகாரங்கள்

1.வாரம் இருமுறை திருஷ்டி கழிப்பது நல்லது.

2.செவ்வாய், வியாழன், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் திருஷ்டி சுத்துவது நல்லது.

3.அமாவாசை அன்றும் சுத்திப் போடலாம்.

4.கிழக்கு நோக்கி நின்று திருஷ்டி கழிக்க வேண்டும்.

5.திருஷ்டி கழிப்பவர்கள் வயதில் மூத்தவராக இருத்தல் நன்று.

6.பூசணிக்காய் அல்லது தேங்காய் அல்லது எலுமிச்சம் பழத்தாலும் சுத்திப் போடுவது நல்லது.

7.மிளகாய் மற்றும் மிளகும் உப்பும் கொண்டு திருஷ்டி சுத்தி அடுப்பில் போடுவது நல்லது.

8.ஜாதகப்படி ராசிக்கல் மோதிரம் அணியலாம்.

9.முச்சந்தியில் அதாவது தெரு முனையில் எலுமிச்சம் பழத்தை சுற்றி எறியலாம்.

கட்டுரையாளர்: முனைவர். N.ஞானரதம்

Cell 9381090389


Next Story