மிதுனம் - ஆண்டு பலன் - 2023
01.01.2023 முதல் 31.12.2023 வரை
மிருகசீர்ஷம் 3,4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள் வரை
(பெயரின் முதல் எழுத்துக்கள்: க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)
ஒன்பதாம் இடத்துச் சனியால் உயர்வு கிடைக்கும்
மிதுன ராசி நேயர்களே!
இதுவரை அஷ்டமத்துச் சனியின் பிடியில் சிக்கியிருந்த உங்களுக்கு இந்தப் புத்தாண்டில் விடிவுகாலம் பிறக்கப் போகிறது. சனி விலகிச் சந்தோஷத்தைக் கொடுக்கப்போகிறார். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். உள்ளத்தில் நினைத்ததை உடனடியாகச் செய்து முடிக்கும் விதத்தில் கிரக நிலைகளின் சஞ்சாரம் இருக்கிறது. கூடுதலாக குருப்பெயர்ச்சியும், ராகு-கேது பெயர்ச்சியும் நற்பலன்களை வழங்கப்போகிறது. அடிப்படை வசதி களைப் பெருக்கிக் கொள்வீர்கள். ஆதாய வரவு வந்துசேரும். மேலும் நற்பலன்களைப் பெற திசாபுத்திக் கேற்ற தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.
புத்தாண்டு கிரக நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், சகாய ஸ்தானாதிபதி சூரியனோடு இணைந்து சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். 11-ல் ராகுவும், 5-ல் கேதுவும் உள்ளனர். 6, 11-க்கு அதிபதியான செவ்வாய், வக்ரம்பெற்று விரய ஸ்தானத்தில் இருக்கிறார். அஷ்டமத்தில் சனியும், 10-ம் இடத்தில் குருவும் பலம் பெற்று விளங்குகிறார்கள். பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி சுக்ரன், சனியோடு இணைந்திருக்கிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்தாண்டு தொடங்குகிறது.
குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால், அந்த ஆதிபத்யங்கள் புனிதமடைகின்றன. அதன்மூலம் உங்களுக்கு நற்பலன்கள் கிடைக்கும். தீய பலன்களை தூய பலன்களாக மாற்றும் ஆற்றல், குருவின் பார்வைக்கு உண்டு. எனவே பணவரவு திருப்தி தரும். குடும்ப முன்னேற்றம் கூடும். சுபச்செலவுகள் அதிகரிக்கும். தாயின் உடல்நலம் சீராகும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. விருப்பப்படி வேலையும் கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர். பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களில் வேலைபார்த்து வந்த தம்பதியர், இனி ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பு உருவாகும். பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட பிரச்சினை, உங்களுக்கு சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் உங்கள் உழைப்பிற்கு முக்கியத்துவம் கிடைக்கும்.
கும்ப - சனி சஞ்சாரம்
29.3.2023 அன்று சனி பகவான், அவிட்டம் 3-ம் பாதத்தில் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாகிச் செல்கிறார். 24.8.2023 அன்று வக்ர இயக்கத்தில் மகரத்திற்கு வரும் சனி பகவான், 20.12.2023 அன்று மீண்டும் கும்ப ராசிக்குச் செல்கிறார். இடையில் வக்ர இயக்கத்தில் கும்ப ராசியிலும், மகர ராசியிலும் சஞ்சரிக்கும் சனியால், நல்ல மாற்றங்கள் ஏற்படும். உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதியாக மட்டுமல்லாமல், பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியாக சனி இருப்பதால், பூர்வ புண்ணியத்தின் பலனாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய யோகங்கள் அனைத்தும் வந்துசேரும். ஒன்பதாம் இடத்தில் சஞ்சரிக்கும் சனியால் ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என்பது ஜோதிட நியதி. பொருளாதார வளர்ச்சி திருப்தி தரும். பற்றாக்குறை அகன்று பல நல்ல காரியங்களைச் செய்ய முன்வருவீர்கள்.
மேஷ - குரு சஞ்சாரம்
22.4.2023 அன்று குரு பகவான், அசுவதி நட்சத்திரம் முதல் பாதத்தில் மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரது பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிகிறது. பார்க்கும் குருவால் பலன் அதிகம் கிடைக்கும். குறிப்பாக லாப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது யோகம்தான். 3-ம் இடத்தில் குரு பார்வை பதிவதால், வளர்ச்சி மீது வளர்ச்சி ஏற்படும். வருமானம் உயரும். முயற்சித்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். முகஸ்துதி பாடியவர்கள் விலகுவர். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். சரிந்து கிடக்கும் பொருளாதாரம் சகஜ நிலைக்கு வந்துவிடும்.
குருவின் பார்வை 5-ம் இடத்தில் பதிவதால், பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது. எனவே பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் விலகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைத்து அதை விரிவுசெய்வீர்கள். கூட்டு முயற்சியில் நன்மை கிட்டும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட வழிபிறக்கும். நிரந்தர வருமானத்திற்கு வழிசெய்வீர்கள். நீடித்த நோய் அகலும். பெற்றோர்களின் அன்பும், ஆதரவும் கிடைக்கும்.
7-ம் இடத்தில் குரு பார்வை பதிவதால் இல்வாழ்க்கை இனிமையாகும். திருமணத் தடை உள்ளவா்களுக்கு, நல்ல வரன் வந்துசேரும். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற நிறைவேறாத முயற்சி, இப்போது கைகூடும். அரசியல் மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் வந்துசேரும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
ராகு-கேது பெயர்ச்சி
8.10.2023 அன்று ரேவதி நட்சத்திரம் 4-ம் பாதம் மீன ராசியில் ராகுவும், சித்திரை நட்சத்திரம் 2-ம் பாதம் கன்னி ராசியில் கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். இதுவரை 11-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு, இப்பொழுது பத்தாம் இடத்திற்கு செல்கின்றார். எனவே வேகத்தோடும், விவேகத்தோடும் செயல்படுவீர்கள். தொழில் வெற்றிநடை போடும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். புதிய ஒப்பந்தங்கள் வந்துசேரும். உத்தியோகத்தில் உள்ளவர் களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவோடு தலைமைப் பதவிகளும் கிடைக்கலாம்.
4-ம் இடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் ஆரோக்கியத் தொல்லை ஏற்படலாம். உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கோ, ஜீரணக் கோளாறுகள், தோல் வியாதி போன்றவை ஏற்படும் வாய்ப்பு உண்டு. ஆரம்பத்திலேயே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. தொழிலில் எதிரிகளின் குறுக்கீடுகள் ஏற்பட்டாலும், அதை சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. தாயின் உடல்நலத்தில் கவனம் தேவை. இதுபோன்ற காலங்களில் எதிர்பார்த்த பலன் கிடைக்க, ராகு-கேதுக்களுக்கு உரிய பரிகாரத்தை யோகபலம் பெற்ற நாளில் செய்வது நல்லது.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
இப்புத்தாண்டில் 4 முறை செவ்வாய் - சனி பார்வை ஏற்படுகிறது. இக்காலத்தில் மிகுந்த கவனம் தேவை. நீங்கள் எதைச் செய்தாலும் மற்றவர்கள் குறை கூறத்தான் செய்வார்கள். குடும்பத்தில் அமைதி குறையும். பண நெருக்கடி அதிகரிக்கும். புதியவர்களை நம்பி எதுவும் செய்ய இயலாது. பிள்ளைகளாலும் பிரச்சினை உரு வாகலாம். ஒரு வேலையை ஒன்றுக்கு இரண்டு முறை செய்ய நேரிடும். ஆரோக்கியத் தொல்லையும், மருத்துவச் செலவுகளும் மனக்கலக்கத்தை உருவாக்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
ஏகாதசி விரதமிருந்து விஷ்ணு, லட்சுமியை வழிபட்டு வாருங்கள். காரைக்குடி அருகே அரியக்குடியில் உள்ள பெருமாளை வணங்கினால் வளம் பெருகும்.
சனி மற்றும் குரு வக்ர காலம்
27.6.2023 முதல் 23.8.2023 வரை, கும்ப ராசியிலும், 24.8.2023 முதல் 23.10.2023 வரை மகரத்திலும் சனி, வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 8, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் சனி பகவான். அஷ்டமாதிபதி வக்ரம் பெறுவது நன்மைதான். என்றாலும் அவர் 9-க்கு அதிபதியாகவும் விளங்குவதால் வக்ர காலத்தில் மிகுந்த விழிப்புணர்ச்சி தேவை. தொழிலில் தடைகளும், தாமதங்களும் அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் பகை உருவாகும். பிறருக்கு எவ்வளவு நன்மை செய்தாலும் நன்றி காட்ட மாட்டார்கள். எதைச் செய்தாலும் யோசித்தும், பூஜித்தும் செய்ய வேண்டிய காலம் இது.
12.9.2023 முதல் 19.12.2023 வரை மேஷ ராசியில் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 7, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் குரு. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரம் பெறுவது நன்மைதான். இக்காலத்தில் தொழில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இனிய மாற்றம் கிடைக்கும். திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடும். புதிய வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட நாளாக நடைபெறாத காரியங்கள் கூட இப்பொழுது துரிதமாக நடைபெறும்.
பெண்களுக்கான பலன்கள்
இந்தப் புத்தாண்டில் மிகுந்த நற்பலன்கள் வரப்போகிறது. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்திணைவர். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். சனிப்பெயர்ச்சி சாதகமாக இருக்கிறது. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ராகு-கேது பெயர்ச்சி, சுபவிரயங்களைக் கொடுக்கும். அஷ்டமத்தில் குரு வரும்பொழுதும் சுபவிரயங்கள் அதிகரிக்கும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். இருப்பினும் சர்ப்ப வழிபாடுகளை மேற்கொள்வது நல்லது. சம்பள உயர்வும், சலுகைகளும் கிடைக்கும்.