மிதுனம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்


மிதுனம் - ஆவணி தமிழ் மாத ஜோதிடம்
x
தினத்தந்தி 18 Aug 2023 12:15 AM IST (Updated: 18 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆவணி மாத ராசி பலன்கள் 18-08-2023 முதல் 17-09-2023 வரை

எல்லாம் அறிந்தும் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாத மிதுன ராசி நேயர்களே!

ஆவணி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் புதன் சகாய ஸ்தானத்தில் வக்ரம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது. திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்ய இயலாது. மாதத் தொடக்கத்தில் 'புத சுக்ர யோகம்', 'புத ஆதித்ய யோகம்', 'குருமங்கல யோகம்' ஆகியவை செயல்பட்டாலும், அவை திருப்தியான பலனைக் கொடுக்காது. எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்துச் செய்வது நல்லது.

கடக - சுக்ரன்

ஆவணி 1-ந் தேதி, கடக ராசிக்கு சுக்ரன் வக்ரமாகி செல்கிறார். உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன் வக்ரமாக சஞ்சரிக்கும் பொழுது, பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்படலாம். அவர்களை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பூர்வீக சொத்து சம்பந்தமாக நடைபெறும் பஞ்சாயத்துகள் இழுபறி நிலையிலேயே இருக்கும். பிள்ளைகளின் கல்யாணம் சம்பந்தமாக செய்த முயற்சியில், நல்ல வரன்கள் பலவும் கைநழுவிச் செல்லலாம். மனப் போராட்டமும், பணப் போராட்டமும் அதிகரிக்கும் நேரம் இது.

கன்னி - செவ்வாய்

ஆவணி 2-ந் தேதி, கன்னி ராசிக்கு செவ்வாய் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில், இடம், பூமி விற்பனையும், அதன் மூலம் லாபமும் கிடைக்கும். கடன் சுமை குறைய வழிபிறக்கும். ஆரோக்கியத் தொல்லை அகலும். உற்சாகத்துடன் செயல்பட்டு, உன்னத வாழ்வமைய வழி அமைத்துக் கொள்வீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும்.

மகர - சனி

சனி பகவான் ஆவணி 7-ந் தேதி, மகர ராசிக்கு வக்ர இயக்கத்தில் செல்கிறார். அங்கு சுமார் 4 மாத காலம் சஞ்சரித்த பின்னர், மீண்டும் கும்ப ராசிக்கு செல்லப் போகிறார். வாக்கிய கணித ரீதியாக வரும் இந்த மாற்றம் உங்கள் வாழ்க்கையில் மீண்டும் அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தை உருவாக்குகிறது. விலகிய சனி மீண்டும் வருவதால் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். வேலை ஆட்களால் பிரச்சினைகள் உருவாகும். வாழ்க்கைத் துணையாலும், வாரிசுகளாலும் மனக்கவலை ஏற்படும். தேக்க நிலை உருவாகி பல பணிகள் செய்ய இயலாமல் போகலாம். பொதுவாழ்வில் உள்ளவர்களால் வீண் பழிகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களிடம் கூடுதல் பொறுப்பை ஒப்படைத்து மனக்கலக்கம் அடையச் செய்வர். இக்காலத்தில் முறையான வழிபாடுகள் முன்னேற்றம் தரும்.

புதன் வக்ர நிவர்த்தி

சிம்மத்தில் சஞ்சாித்து வரும் புதன், ஆவணி 15-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிநாதன் வக்ர நிவர்த்தியாவது யோகம்தான். உடல்நலம் சீராகும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். சவாலான பணிகளைக் கூட சாதாரணமாக முடித்து விடுவீர்கள். கவலை என்ற மூன்றெழுத்து அகன்றோடும் நேரம் இது. பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். பொதுவாழ்வில் இருப்பவர்கள், வீண்பழிக்கு ஆளாகாமல் கவனமாக செயல்படுங்கள். தொழில் செய்பவர்கள், வேலை ஆட்களுடன் போராட வேண்டிய சூழல் உருவாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சகப் பணி யாளர்களால் தொல்லை வரலாம். கலைஞர்களுக்கு வாய்ப்புகள், கைநழுவிச் செல்லக்கூடும். மாணவர்களுக்கு மறதி அதிகரிக்கும். பெண்களுக்கு பிரச்சினைகள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படலாம். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு கூடும். சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஆகஸ்டு: 20, 21, 31, செப்டம்பர்: 4, 5, 10, 11, 12, 17.

மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ரோஸ்.


Next Story