மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்


மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மார்கழி மாத ராசி பலன்கள் 16-12-2022 முதல் 14-01-2023 வரை

சவாலான காரியத்தை சாதாரணமாக முடித்துக் காட்டும் மிதுன ராசி நேயர்களே!

மார்கழி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் சப்தம ஸ்தானத்தில் சூரியனோடும் சுக்ரனோடும் இணைந்து புதன் சஞ்சரிக்கிறார். எனவே 'புத சுக்ர யோகம்', 'புத ஆதித்ய யோகம்' உருவாகின்றது. எனவே அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றாலும் பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இடமாற்றங்கள் இனிமை தரும் விதம் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பணி ஓய்வு பெற்ற பின்பும் கூட மீண்டும் பணிபுரியும் வாய்ப்பு உண்டு.

புதன் வக்ர இயக்கம்

உங்கள் ராசிக்கும், 4-ம் இடத்திற்கும் அதிபதியான புதன், மார்கழி 3-ந் தேதி, தனுசு ராசியில் வக்ரம் பெறுகிறார். சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதன் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லையால் மருத்துவச் செலவு அதிகரிக்கும். உங்கள் ராசிநாதனாகவும் புதன் விளங்குவதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. இரக்க சிந்தனையின் காரணமாக சில இடையூறுகளை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்காது. மகிழ்ச்சி குறையும். விலை உயர்ந்த பொருட்கள் அல்லது வாகனங்கள் வாங்கும் முயற்சியில் ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். உறுதியான உத்தியோக மாற்றம் கூட கைநழுவிச் செல்லலாம். இக்காலத்தில் சிறப்பு வழிபாடுகள் தேவை.

மகர - சுக்ரன் சஞ்சாரம்

உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், மார்கழி 15-ந் தேதி மகர ராசிக்குச் செல்கிறார். 12-க்கு அதிபதியான சுக்ரன் 8-ல் சஞ்சரிக்கும் போது, 'விபரீத ராஜயோகம்' செயல்படும். எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்குப் பின்னணியாக இருந்து சில காரியங்களை முடித்துக் கொடுப்பர். பெண்வழிப் பிரச்சினைகள் அகலும். புதிய வாகனம் வாங்கிப் பயணிக்கும் எண்ணம் கைகூடும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. வெளிநாட்டில் இருந்து ஒருசில அழைப்புகள் வரலாம். பிள்ளைகளின் வேலைவாய்ப்பு கருதி எடுத்த முயற்சி வெற்றிபெறும்.

புதன் வக்ர நிவர்த்தி

தனுசு ராசியில் சஞ்சரிக்கும் புதன், மார்கழி 24-ந் தேதி வக்ர நிவர்த்தியாவதால் நல்ல பலன்கள் இல்லம் தேடி வரப்போகிறது. குறிப்பாக ராசிநாதன் வக்ர நிவர்த்தியாவதால் ஆரோக்கியம் சீராகும். ஆதாயம் தரும் தகவல்கள் அதிகம் கிடைக்கும். நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். நிச்சயித்த பிறகு நின்றுபோன திருமணங்கள் மீண்டும் கைகூடும். உத்தியோகத்தில் உயர்அதிகாரிகளின் பழக்கத்தால் பணி நிரந்தரமாக எடுத்த முயற்சி கைகூடும். வீடு, இடம் வாங்கும் யோகம் உண்டு. வெற்றிச் செய்திகள் அதிகம் வீடு தேடி வரும்.

செவ்வாய் வக்ர நிவர்த்தி

உங்கள் ராசிக்கு 6, 11 ஆகிய இடங்களுக்கு அதிபதியான செவ்வாய், மார்கழி 29-ந் தேதி ரிஷபத்தில் வக்ர நிவர்த்தியாகிறார். ஜீவன ஸ்தானம் எனப்படும் ஆறாமிடம், எதிர்ப்பு, வியாதி, கடன் ஆகியவற்றையும் குறிக்கும். எனவே செவ்வாயின் வக்ர நிவர்த்திக்குப் பின், மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உங்கள் முன்னேற்றத்தை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டாம். உடல்நலத்தில் சிறுசிறு பிரச்சினைகள் உருவாகலாம். மருத்துவச்செலவு உண்டு. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.

லாபாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் தொழிலில் ஓரளவு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவுசெய்யவும், சொந்தக் கட்டிடத்திற்கு மாற்றவும் எடுத்த முயற்சி கைகூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிநாட்டு நிறுவனங்களில் இருந்து நல்ல சம்பளத்துடன் அழைப்புகள் வரலாம். இளைய சகோதரத்தோடு இருந்த பகை மாறும். இல்லத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகள் தென்படும். இடம், பூமி விற்பனையால் லாபம் கிடைக்கும். முன்னோர் சொத்துக்களை விற்றுவிட்டு முறையாக புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.

பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- டிசம்பர்: 16, 17, 28, 29, ஜனவரி: 1, 2, 8, 9. மகிழ்ச்சி தரும் வண்ணம்:- ஆரஞ்சு.

பெண்களுக்கான பலன்கள்

இம்மாதம் 10-ல் குரு சஞ்சரிப்பதால் இடமாற்றம், ஊர் மாற்றம் வரலாம். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம் இருப்பதால் கணவன் - மனைவிக்குள் புரிந்து கொண்டு செயல்படுவதன் மூலமே அமைதி காண இயலும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் ெகாள்ளுங்கள். உங்கள் பெயரிலேயே சொத்துக்கள் வாங்கும் அமைப்பு ஏற்படலாம். பணிபுரியும் பெண்களுக்கு சலுகைகள் கிடைப்பதில் தாமதம் காணப்படும். உத்தியோகத்தில் இருந்து விருப்ப ஓய்வில் வெளிவரும் எண்ணம் அதிகரிக்கும்.


Next Story