மிதுனம் - தமிழ் மாத ஜோதிடம்
ஐப்பசி மாத ராசி பலன்கள் 18-10-2022 முதல் 16-11-2022 வரை
ஆலோசனை சொல்வதில் அசகாய சூரர்களான மிதுன ராசி நேயர்களே!
ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் புதன், சூரியனோடு இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார். எனவே பொருளாதார நிலை சிறப்பாக அமைந்தாலும், அஷ்டமத்துச் சனி வலுவடைந்திருப்பதால் விரயங்களே அதிகரிக்கும். திட்டமிட்டபடி எதையும் செய்ய இயலாது.
துலாம் - சுக்ரன் சஞ்சாரம்
உங்கள் ராசிக்கு 5, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், ஐப்பசி 2-ந் தேதி துலாம் ராசிக்கு செல்கிறார். துலாம், சுக்ரனுக்கு சொந்த வீடாகும். பாக்கிய ஸ்தானாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது, வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். வளர்ச்சி அதிகரிக்கும். முன்னோர் சொத்துக்களில் முறையான பங்கீடு கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பெண் பிள்ளைகளின் திருமண சீர்வரிசையை முன்னிட்டு, தங்கம், வெள்ளி போன்ற விலை உயர்ந்த பொருட்களை வாங்குவதில் தனிக்கவனம் செலுத்துவீர்கள்.
துலாம் - புதன் சஞ்சாரம்
உங்கள் ராசிநாதனாகவும், 4-ம் இடத்திற்கு அதிபதியாகவும் விளங்குபவர் புதன். அவர் பஞ்சம ஸ்தானத்திற்கு வரும்பொழுது மிகுந்த யோகத்தை வழங்குவார். குறிப்பாக பிள்ளைகளின் கல்வி சம்பந்தமாகவும், கடல்தாண்டிச் சென்று பணிபுரிவது சம்பந்தமாகவும் மேற்கொள்ளும் முயற்சிகள் கைகூடும். மாமன், மைத்துனர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் சம்பள உயர்வு மற்றும் சலுகைகள் கிடைக்கும்.
மிதுன - செவ்வாய் வக்ரம்
ஐப்பசி 18-ந் தேதி, மிதுனத்தில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய் வக்ரம் பெறுவதோடு, மகரத்தில் சஞ்சரிக்கும் சனியையும் அல்லவா பார்க்கிறார். எனவே மிக மிக கவனம் தேவை. இந்த நேரத்தில் எந்த முடிவும் எடுக்க இயலாது. விரயங்கள் அதிகரிக்கும். வீடு மாற்றம், உத்தியோக மாற்றம் நிகழும். இடம் வாங்கியதில் பிரச்சினை, பத்திரப் பதிவில் தடை ஏற்படலாம். உதவுவதாகச் சொன்னவர்கள், கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வீண்பழிகள் வந்து சேரலாம். பணியில் இருந்து விலகிக்கொள்ள வேண்டிய கட்டாயச் சூழலும் உருவாகலாம்.
விருச்சிக - புதன் சஞ்சாரம்
ஐப்பசி 23-ந் தேதி, விருச்சிக ராசிக்கு புதன் வருகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், சுக ஸ்தானத்திற்கு அதிபதியாகவும் விளங்கும் புதன், 6-ம் இடத்தில் மறைவது யோகம்தான். மறைந்த புதனால் நிறைந்த தன லாபம் கிடைக்கும். மக்கள் செல்வங்களால் மேன்மை உண்டாகும். சிக்கல்களில் இருந்தும், சிரமங்களில் இருந்தும் விடுபடுவீர்கள். நட்பால் நன்மை உண்டு. நவீனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் கூடும்.
விருச்சிக - சுக்ரன் சஞ்சாரம்
ஐப்பசி 26-ந் தேதி, விருச்சிக ராசிக்கு சுக்ரன் செல்கிறார். உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் சுக்ரன் சஞ்சரிக்கப் போகிறார். 12-க்கு அதிபதி 6-ல் சஞ்சரிக்கும் இந்த நேரம் `விபரீத ராஜயோகம்' செயல்படப் போகிறது. எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும். வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகும். வளர்ச்சி கூடும். பஞ்சமாதிபதியாகவும் சுக்ரன் விளங்குவதால் பெண் பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் அகலும்.
குரு வக்ர நிவர்த்தி
உங்கள் ராசிக்கு 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, ஐப்பசி 30-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். 10-ல் குரு சஞ்சரிப்பது அவ்வளவு நல்லதல்ல. அதே நேரம் மீன ராசி குருவிற்கு சொந்த வீடாக இருப்பதாலும், குருவின் பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதாலும் இட மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் ஏற்படலாம். ஒரு சிலர் சுயதொழில் தொடங்கலாமா? என்று சிந்திப்பீர்கள். குரு பார்வையால் கடன்சுமை குறைய வழிபிறக்கும்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் லட்சுமி வழிபாடு விருப்பங்களை நிறைவேற்றும்.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- அக்டோபர்: 18, 19, 23, 24, நவம்பர்: 3, 4, 7, 8, 14, 15, 16.
மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பிரவுன்.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் சனியை, செவ்வாய் பார்ப்பதால் பணப்புழக்கம், மனக் குழப்பம் குறையும். கணவன்- மனைவிக்குள் சண்டை- சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும். உடல்நலக் கோளாறு காரணமாக, அடிக்கடி மருத்துவச் ெசலவுகளும் ஏற்படலாம். தடைபட்டுக் கொண்டே செல்லும் பிள்ளைகளின் திருமணத்தைப் பற்றி, குடும்ப உறுப்பினர்களுடன் தீவிரமாக ஆலோசிப்பீர்கள். பணிபுரியும் பெண்களுக்கு வீண் பிரச்சினைகள் வரலாம். எனவே மற்றவர் களுடன் பேசும்போது கவனம் தேவை.