செழிப்பான வாழ்வு அமைய பிரதமை விரதம்


செழிப்பான வாழ்வு அமைய பிரதமை விரதம்
x

மாசி மாத பிரதமை நாளில் விரதமிருந்து அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்கலாம்.

அமாவாசை மற்றும் பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமை ஆகும். அமாவாசையை அடுத்துவரும் பிரதமையை சுக்கில பட்ச பிரதமை என்றும், பவுர்ணமியை அடுத்த பிரதமையை கிருஷ்ண பட்ச பிரதமை என்றும் அழைக்கின்றனர்.

வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம், புது வீடு கட்டுவதற்கான வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் போன்ற சுபகாரியங்கள் செய்வதற்கும் ஏற்ற திதியாகும். நெருப்பு தொடர்புடைய காரியங்களை செய்யலாம். அக்னி வேள்விகள், ஹோமங்கள் போன்றவற்றை செய்யலாம்.

சித்திரை கார்த்திகை மாதத்தில் பிரதமை விரதங்கள் விசேஷமானவை. இந்த விரதத்தில் நாள் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். பிரதமையின் அதிதேவதையான அக்னி பகவானுக்கு பாயாசம் நிவேதனம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் இரவு பொழுது மட்டும் உணவு அருந்தி விரதமிருக்கலாம். அல்லது நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம். இந்த விரதம் இருப்பதன் மூலம் செழிப்பான வாழ்வு, மரணத்துக்குப் பின் சொர்க்கம் கிடைக்கும்.

மாசி மாத பிரதமை உத்தமமானது. அன்றைய தினம் விரதமிருந்து அன்றிரவு நெய்யால் ஹோமம் செய்து அக்னியை ஆராதிக்க வேண்டும்.

பிரதமை திதியை பாட்டியம் என்றும் சொல்வார்கள். பவுர்ணமிக்குப் பிறகு சந்திரன் சற்று குன்றுதலை அவ்வாறு சொல்வார்கள். பவுர்ணமி முழு மதி நாள். மறுநாள் தேய்பிறை துவக்கம். அன்று சற்றே குன்றுதல். அதனை பாட்டிமை அதாவது பிரதமை திதி. கதிர்வீச்சுக் குன்றுவதால் அன்று சுபகாரியங்கள் எதையும் செய்யக் கூடாது என்பார்கள். அமாவாசைக்கு மறுநாள்தான் மிகவும் மோசமானது, அன்றைய தினம் எதையும் செய்யக் கூடாது என்றும் கூறுவார்கள். போர் தொடுத்தல், ஆநிரை கவர்தல் போன்றவை செய்யலாம் என்று கூறுவார்கள். போருக்கான துவக்கங்களை அன்று செய்யலாம்.

சூரியனும், சந்திரனும் இணைவது அமாவாசை அன்று. இரண்டுமே இயல்பு நிலை மாறுபட்டவை. அவைகள் ஒன்றாக சேரும்போது சீக்கிரமாகவே ஆவி பிரியும். அதனால்தான் அமாவாசை, அதற்கு முதல் நாள், அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதிகளில் உயிர் நீப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதற்கு காரணம், ஆத்ம காரகன் சூரியனுடன், மனோகாரகனான சந்திரன் நெருங்கும்போது உடலின் வலிமை, உணவு உட்கொள்ளும் திறன் குறையும். ஏதோ ஒரு அசவுகரியம் உண்டாகும். சிலருக்கு திடீர் மாரடைப்பு உண்டாகும். அதனால்தான் உடல்நலம் குன்றி மரணப் படுக்கையில் இருக்கும் முதியவர்கள் பற்றி பேசும்போதும், தீவிர நோயால் பாதிக்கப்பட்டு மரணப் படுக்கையில் இருப்பவர்கள் பற்றி பேசும்போதும், அமாவாசையை தாண்டுமா? என சொல்கிறார்கள்.

அமாவாசை நாளுக்கும், பவுர்ணமி நாளுக்கும் (பூரணை) அடுத்து வரும் முதலாவது திதி பிரதமை ஆகும். பிரதம எனும் வடமொழிச் சொல் முதலாவது என பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட தொகுதியில் முதல் நாளாக வருவதால் இந்த நாள் இப்பெயரால் அழைக்கப்பட்டது.

30 நாட்களைக் கொண்ட சந்திர மாதமொன்றில் அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறை காலத்தை சுக்கிலபட்சம் என்றும், பவுர்ணமிக்கு பிறகு வரும் தேய்பிறை காலத்தைக் கிருஷ்ண பட்சம் என்றும் அழைக்கப்படுகிறது.

பிரதமையில் வரும் பண்டிகைகளும், விரதங்களும்:

சந்திர ஆண்டுப் பிறப்பு (சந்திரமான யுகாதி) - சித்திரை மாத சுக்கில பட்ச பிரதமை.

நவராத்திரி பூஜை தொடக்கம் - ஐப்பசி மாத சுக்கில பட்ச பிரதமை

விநாயகருக்கான கார்த்திகை சஷ்டி விரதம் தொடக்கம் - கார்த்திகை மாத தேய்பிறை பிரதமை.


Next Story