மகரம் - ஆண்டு பலன் - 2022
(உத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 வரை) (பெயரின் முதல் எழுத்துக்கள்:- போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)
ஏழரைச் சனியில் ஜென்மச் சனி
மகர ராசி நேயர்களே!
இந்தப் புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். அவரோடு புதனும், சுக்ரனும் இணைந்திருக்கின்றனர். ஏழரைச் சனியில் ஜென்மச் சனியின் ஆதிக்கம் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் எதையும் யோசித்துச் செய்வது நல்லது. வரவு வந்தாலும் இருமடங்கு செலவாகலாம். சகாய- விரய ஸ்தானாதிபதியான குரு பகவான், தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் விரயத்திற்கேற்ற வருமானம் வந்து சேரும். கிரகங்கள் பலமிழந்திருக்கும் நேரத்தில் யோகபலம் பெற்ற நாளில் தெய்வ வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் திருப்தியான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள இயலும்.
புத்தாண்டின் தொடக்க நிலை
புத்தாண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசியிலேயே பலம் பெற்று சஞ்சரிக்கிறார். அவரோடு 5, 10-க்கு அதிபதியான சுக்ரனும், 6, 9-க்கு அதிபதியான புதனும் இணைந்து 'புத சுக்ர யோக'த்தை உருவாக்குகிறார்கள். 2-ம் இடத்தில் இருக்கும் குருவின் பார்வையால், குடும்பப் பிரச்சினைகள் குறையும். கொடுக்கல் -வாங்கல்களில் திடீர் முன்னேற்றம் உண்டு.
லாப ஸ்தானத்தில் சந்திரனோடு செவ்வாய் இணைந்து 'சந்திர மங்கள யோக'த்தை உருவாக்குவதால், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படும். பெற்றோர்களின் மணி விழாக்கள் மற்றும் கடை திறப்பு விழா, கட்டிடத் திறப்பு விழா போன்றவை நடைபெறலாம். புத்திர ஸ்தானத்தில் ராகு இருப்பதால், பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள். 11-ல் கேது இருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறப்புகள் உறுதுணையாக இருப்பர். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும்.
கும்ப குருவின் சஞ்சாரம்
வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கிறார். அவரது பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே உத்தியோகத்தில் இருந்த பிரச்சினைகள் அகலும். பணிநிரந்தரம் பற்றிய நல்ல தகவல் கிடைக்கலாம். வாங்கல் - கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்ள எடுத்த முயற்சி வெற்றி தரும். பொதுவாழ்வில் இருப்பவர்கள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். கைநழுவிச் சென்ற ஒப்பந்தங்கள் மீண்டும் வரலாம்.
ராகு-கேது பெயர்ச்சி
21.3.2022 அன்று, ராகு-கேது பெயர்ச்சி நிகழ விருக்கிறது. இந்தப் பெயர்ச்சியால் 4-ம் இடத்தில் ராகுவும், 10-ம் இடத்தில் கேதுவும் சஞ்சரிப்பார்கள். கேந்திரத்தில் ராகு இருப்பதால் படிப்பு சம்பந்தமாக எடுத்த முயற்சி கைகூடும். வாகனம் வாங்குவது பற்றிச் சிந்திப்பீர்கள். தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை. அர்த்தாஷ்டம ராகு என்பதால் அடிக்கடி பயணங்கள் அதிகரிக்கும். அலைச்சலும் கூடும். கேது பலத்தால் தொழில் மாற்றங்கள் ஒருசிலருக்கு ஏற்படலாம். புதிய பங்குதாரர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.
குருப்பெயர்ச்சி
13.4.2022 அன்று, மீன ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிறார். அது குருவிற்கு சொந்த வீடாகும். அதன் பார்வைக்கு இப்பொழுது பலன் அதிகமாகக் கிடைக்கும். 7, 9, 11 ஆகிய இடங்களில் அதன் பார்வை பதிவதால் கல்யாண வாய்ப்புகள் கைகூடலாம். கடமையில் இருந்த தொய்வு அகலும். பாகப்பிரிவினைகள் செய்து கொள்வதில் தீவிரம் காட்டுவீர்கள். பொருளாதாரத்தில் இருந்த பற்றாக்குறை அகலும். வெளிநாட்டு வணிகம் லாபம் தரும். இளைய சகோதரத்தோடு இணக்கம் ஏற்படும்.
சனி மற்றும் குருவின் வக்ர காலங்கள்
25.5.2022 முதல் 9.10.2022 வரை, மகரத்தில் சனி வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு அதிபதியாகவும், தனாதிபதியாகவும் விளங்குபவர் சனி. அவர் வக்ரம் பெறுவது அவ்வளவு நல்லதல்ல. ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும். மருத்துவச் செலவுகள் கூடும். பணப்பற்றாக்குறை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரென மாற்றங்கள் வந்து சேரும். உறவினர்களுக்கு உதவி செய்வதன் மூலம் பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடும். எதையும் நிதானத்துடன் செய்ய வேண்டிய நேரம் இது.
8.8.2022 முதல் 16.11.2022 வரை, மீனத்தில் சஞ்சரிக்கும் குரு வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 3, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதியான குரு, வக்ரம் பெறும்பொழுது சகோதர ஒற்றுமை குறையும். வழக்குகள் சாதகமாக அமையாது. பயணங்களில் இடையூறுகள் வரலாம். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு சொந்த ஊர் திரும்ப முடியாத சூழ்நிலை உருவாகலாம். உறவினர் பகையால் உள்ளம் வாட நேரிடும். உத்தியோகத்தில் மீண்டும் பிரச்சினை தலைதூக்கும்.
வளர்ச்சி தரும் வழிபாடு
இந்த புத்தாண்டு பிறந்ததும் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனி பகவானை வழிபட்டு வாருங்கள்.
பெண்களுக்கான பலன்கள்
குருப்பெயர்ச்சி வரை பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். கல்யாண முயற்சிகளில் இருந்த தடை அகலும். உறவினர்களின் விரோதங்களை வளர்த்துக் கொள்ள வேண்டாம். வீடு மாற்றங்கள் நன்மை தருவதாக அமையும். பணிபுரியும் பெண்களுக்கு பிரச்சினைகள் அதிகரிக்கும். ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் நினைத்தது நிறைவேறுவதில் கொஞ்சம் தாமதம் ஏற்படும்.
கவனமுடன் செயல்பட வேண்டிய காலம்
26.2.2022 முதல் 6.4.2022 வரை, மகரத்தில் சனி -செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. 9.10.2022 முதல் 29.11.2022 வரை, செவ்வாயின் பார்வை சனி மீது பதிகிறது. இரண்டு முரண்பாடான கிரகங்களின் பார்வையும், சேர்க்கையும் அவ்வளவு நல்லதல்ல. குறிப்பாக உங்கள் ராசிநாதனாக சனி விளங்குவதால் மனக்கவலைகள் அதிகரிக்கும். சொந்தங்களாலும், சொத்துக்களாலும் மீண்டும் பிரச்சினை தலைதூக்கும். பொதுவாழ்வில் உள்ளவர்கள், மக்கள் செல்வாக்கை தக்க வைத்துக் கொள்வது அரிது.