மகரம் - தமிழ் மாத ஜோதிடம்
ஆனி மாத ராசி பலன்கள் 15-06-2022 முதல் 16-07-2022 வரை
யாரைப் பார்த்தால் காரியத்தை முடிக்க முடியும் என்று அறிந்த மகர ராசி நேயர்களே!
ஆனி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். சுகாதிபதி செவ்வாயை, சனி பார்க்கிறார். எனவே ஆரோக்கியத் தொல்லைகள் அதிகரிக்கும்.
ரிஷப - சுக்ரன் சஞ்சாரம்
ஆனி 4-ந் தேதி, ரிஷப ராசிக்கு சுக்ரன் வருகிறார். உங்கள் ராசிக்கு 5, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதியான சுக்ரன், பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பலம்பெறும் பொழுது ஓரளவு நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக செய்தொழிலில் போதுமான வருமானம் கிடைக்கும். ஜென்மச் சனி வக்ரம் பெற்றிருப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. திடீர் திடீரென மாற்றங்கள் உருவாகும். உறவினர்களின் யோசனை மனக்குழப்பத்தை ஏற்படுத்தும்.
மிதுன - புதன் சஞ்சாரம்
ஆனி 11-ந் தேதி, மிதுன ராசிக்கு புதன் செல்கிறார். 6-க்கு அதிபதி புதன் 6-ல் வலுவடையும் இந்த நேரம் மிகுந்த கவனத்தோடு செயல்படுவது நல்லது. எதிரிகளின் பலம் கொஞ்சம் மேலோங்கியிருக்கும். உடல்நலத்திலும் மீண்டும் பழைய தொல்லை தலைதூக்கும். எதையும் யோசித்துச் செய்வது மட்டுமல்லாமல், அருளாளர்கள் மற்றும் அனுபவஸ்தர்களின் ஆலோசனைகளையும் கேட்டு செயல்பட்டால்தான் வெற்றிபெற முடியும்.
மேஷ - செவ்வாய் சஞ்சாரம்
ஆனி 12-ந் தேதி, மேஷ ராசிக்கு செவ்வாய் செல்கிறார். இக்காலத்தில் சுக ஸ்தானம் வலுவடைகின்றது. எனவே வளர்ச்சி கூடும். வருமானம் திருப்தி தரும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. பத்திரப்பதிவில் இருந்த தடை அகலும். சொத்து விற்பனை லாபம் தரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களை விலக்குவீர்கள். உத்தியோகத்தில் மேலிடத்தின் சலுகைகள் கிடைக்கும்.
கடக - புதன் சஞ்சாரம்
ஆனி 28-ந் தேதி, கடக ராசிக்கு புதன் செல் கிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். அவர் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பது யோகம்தான். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வெளிநாட்டில் உள்ள நண்பர்கள் ஆதாயம் தரும் தகவலைக் கொடுப்பர். எதிர் காலத்திற்காக சேமிக்க முன்வருவீர்கள்.
மிதுன - சுக்ரன் சஞ்சாரம்
ஆனி 29-ந் தேதி, மிதுன ராசிக்கு சுக்ரன் செல்கிறார். பஞ்சமாதிபதி 6-ல் வரும் இந்த நேரம் பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து உதிரி வருமானங்கள் வந்துசேரும். நகைகளை வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். உறவினர்களும், நண்பர்களும் ஆதரவாக இருப்பர். மனக்குழப்பம் அகலும். வியாபாரத்தில் பற்று, வரவு கணிசமாக உயரும். 'கல்யாணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறவில்லையே' என்ற கவலை அகலும்.
இம்மாதம் சனிக்கிழமை தோறும் சனிபகவானை வழிபடுவது நல்லது.
பணத்தேவையைப் பூர்த்தி செய்யும் நாட்கள்:- ஜூன்: 20, 21, 24, 25, ஜூலை: 7, 8, 10, 11 மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.
பெண்களுக்கான பலன்கள்
இம்மாதம் ஜென்மச் சனி வக்ரம் பெற்றிருப்பதாலும், 10-ல் கேது இருப்பதாலும் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். உறவினர் பகை உருவாகும். கணவன் -மனைவிக்குள் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு அடிக்கடி பிரச்சினைகள் ஏற்படலாம். பணி நிரந்தரமாவதில் தாமதம் ஏற்படும்.